கைவெச்சுட்டாங்க.. இனி ‘இந்தியா’ இல்ல.. ‘பாரத்’ தான்! பாட புத்தகங்களில் பெயரை மாற்ற NCERT பரிந்துரை
டெல்லி: பாட புத்தகங்களில் இடம்பெற்று இருக்கும் 'இந்தியா' என்ற நாட்டின் பெயரை 'பாரத்' என்று மாற்றம் செய்வதற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பரிந்துரை செய்து இருக்கிறது.
நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான புத்தகங்களை தயாரிக்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) குழு, அதன் பாடப் புத்தகங்களில் உள்ள இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்ற பரிந்துரை செய்து உள்ளது.

அதேபோல், என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இந்துக்களின் வெற்றிகளை பதிவு செய்யும் பரிந்துரையையும் இந்த குழு முன்வைத்து உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டு கூட்டணி அமைத்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் நடைபெற்ற இந்த கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில், தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என பெயரிட முடிவு செய்யப்பட்டது. உடனே பாஜக தலைவர்கள் பாரதம் என்பதே உண்மையான பெயர் என்றும், நாட்டின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக மத்திய அரசும் இந்தியா என்ற வார்த்தையை தவிர்த்து பாரதம் என பயன்படுத்த தொடங்கியது. ஆசியான் மாநாட்டு அழைப்பிதலில் பிரதமர் மோடியை இந்தியாவின் பிரதமர் என்று குறிப்பிடாமல், பாரதத்தின் பிரதமர் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேபோல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போதும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிய இரவு விருந்திற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில் பாரதத்தின் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதேபோல் ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன் வைக்கப்பட்ட நாட்டின் பெயர் பலகையில் இந்தியா என்று குறிப்பிடாமல் பாரத் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. பாரதம் என்ற வார்த்தையின் பொருள் அரசியலமைப்பில் பிரதிபலிக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்து இருந்தார். பாரதம் என மாற்றியதற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகளிடம் இருந்து வந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு பதில் அளித்தார்.
இந்த நிலையில் பள்ளி பாடபுத்தகங்களில் நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் பரிந்துரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங்க் கார்கே, என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இந்தியா என்ற வார்த்தையை பாரதம் என மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் பெயரை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. GAMEஐ மாற்றாமல் NAME ஐ மாற்றுகிறார்கள். பெயர் மாற்றும் திட்டங்கள் மட்டுமே நடக்கின்றன. இந்தியா என்ற பெயரின் மீது திடீரென வெறுப்பு ஏன்? ஒன்பது ஆண்டுகள் ஏன் காத்திருந்தார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications