அதிமுக கூட்டணியில் எவ்வளவு சீட்? அமித்ஷாவை சந்தித்த டிடிவி தினகரன்.. அடுத்து அன்புமணியுடன் மீட்டிங்
டெல்லி: தமிழகத்தில் சட்டசபை தேர்தலையொட்டில டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் இன்று சந்தித்தார். இருவரும் தொகுதி பங்கீடு பற்றி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்ததாக சற்று நேரத்தில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் மீட்டிங் நடத்த உள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமக அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல கட்சிகள் உள்ளன. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இந்த கூட்டணி செயல்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. நேற்று முன்தினம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
4 நாட்களில் தொகுதி பங்கீடு
அமித்ஷா - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ''இன்னும் 4 நாட்களில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்'' என்று கூறினார்.
இந்நிலையில் தான், நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
அமித்ஷா - அன்புமணி - டிடிவி
இந்நிலையில் தான் இன்று காலையில் அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து அமித்ஷாவை சந்தித்த பேச உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன்படி முதற்கட்டமாக டிடிவி தினகரன், அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார்.
இருவரும், தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிடிவி தினகரன் பாஜக வழியாக தான் அதிமுகவிடம் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகிறது. அடுத்ததாக சற்று நேரத்தில் அமித்ஷாவை, அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச உள்ளார்.
பாமக - அமமுகவிற்கு எத்தனை தொகுதிகள்?
அதன்படி முதற்கட்ட தகவலின்படி அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 9 தொகுதிகள், பாஜக 30+ தொகுதிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
பியூஷ் கோயல் சென்னை வருகை
இந்நிலையில் தான் தற்போதைய சூழலில் எந்தெந்த தொகுதிகள்? என்பது தொடர்பாக தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்துக்கு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று வருகை தர உள்ளார்.
விரைவில் பாஜகவின் தொகுதி பங்கீட்டை முடிக்கும் வகையில் அவரது இந்த பயணம் அமைய உள்ளது. இதனால் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் இந்த நிகழ்வுகள் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதோடு விரைவில் தொகுதி பங்கீடு முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications