நீட் விவாதம்: அனுமதி மறுப்பு- ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு- பெண் எம்பி மயங்கி விழுந்தார்!
டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பாக விவாதிக்க கோரி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்ததால் ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபாவில் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேதம் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜ்யசபாவில் இன்று காலை முதலே நீட் முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் இதனை ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சபை நடவடிக்கைகள் முதலில் பகல் 12 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. பிற்பகல் 2.30 மணிக்கு சபை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சிகள் தங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தின. அப்போதும் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதனால் ராஜ்யசபாவில் இருந்து "இந்தியா" கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதனிடையே ராஜ்யசபாவில் முழக்கமிட்டுக் கொண்டிருந்த போது காங்கிரஸ் பெண் எம்பி பூலோ தேவி நேகம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பூலோ தேவி நேகம் எம்.பி. இத்தனை அமளிக்கு இடையேயும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராஜ்யசபாவில் விவாதம் நடத்தப்பட்டது.

முன்னதாக இது தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 267-வது பிரிவின் கீழ் ராஜ்யசபாவில் சிறப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இந்த விவாதம் நடத்த அனுமதிக்கப்படும் போது எங்களது கோரிக்கைகளை முன்வைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications