"படித்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்!" அட்வைஸ் செய்த டீச்சர்! மறுநாளே டிஸ்மிஸ் செய்த அன்அகாடமி
டெல்லி: படித்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மாணவர்களை வலியுறுத்திய ஆசிரியரை அன் அகாடமி நிறுவனம் டிஸ்மிஸ் செய்த நிலையில், இதற்கு நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
இப்போது இணையம் வழியாக எடுக்கப்படும் சிறப்பு வகுப்புகள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இதுபோல வீடுகளில் இருந்து எடுக்கப்படும் சிறப்பு வகுப்புகள் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதில் இப்போது பல்வேறு டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படி இந்த துறையில் டாப் இடத்தில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்றான அன் அகாடமி நடந்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
டிஸ்மிஸ்: அதாவது அன் அகாடமி வகுப்பு ஒன்றில் ஆசிரியர் ஒருவர் படித்த வேட்பாளர்களுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.. அது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆன நிலையில், அந்த நபர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.. வகுப்பறை என்பது தனிப்பட்ட கருத்துக்களைப் பகிரும் இடம் இல்லை என்று கூறிய அன் அகாடமி இணை நிறுவனர் ரோமன் சைனி தெரிவித்துள்ளார். கோட் விதிகளை மீறியதற்காகக் கல்வியாளர் கரண் சங்வான் என்ற அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்களுடையது ஒரு கல்வித் தளமாகும்.. தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.. இதை உறுதி செய்ய எங்கள் கல்வியாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய பக்கச்சார்பற்ற கோட்கள் இருக்கும். அதை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பின்பற்றி வருகிறோம். மாணவர்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தை கற்கவே இங்கு வருகிறார்கள்.
வகுப்பறைகள் என்பது தனிப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான இடம் இல்லை.. ஏனென்றால் இது வேறு மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தலாம்.. இதில் கரண் சங்வான் இந்த நடத்தை விதிகளை மீறியுள்ளார் என்பதற்காக அவர் பணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
என்ன நடந்தது: முன்னதாக ட்விட்டர் தளத்தில் வீடியோ ஒன்று டிரெண்டானது.. அதில அன் அகாடமியில் ஆசிரியராக உள்ள கரண் சங்வான், "பெயர்களை மாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.. நன்கு படித்த அரசியல்வாதிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்" எனக் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆனது.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் அதனைப் பகிர்ந்து, நல்லா படித்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "படித்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்வது ஒரு குற்றமா? படிப்பறிவில்லாதவர் தனிப்பட்ட முறையில் நான் அவரை மதிக்கிறேன்.
கொந்தளிக்கும் நெட்டின்சன்கள்: ஆனால் மக்கள் பிரதிநிதிகள் படிப்பறிவில்லாதவர்களாக இருக்க முடியாது. இது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யுகம். கல்வியறிவற்ற மக்கள் பிரதிநிதிகளால் நவீன உலகிற்கு ஏற்றபடி நகரைக் கட்டமைக்க முடியாது" எனப் பதிவிட்டுள்ளார். அவர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் இதனைக் கடுமையாகக் கண்டித்து வருகிறார்கள். அன் அகாடமிக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிடும் நெட்டிசன்கள், அன் அகாடமிக்கு எதிரான ஹேஷ்டேக்குகளையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications