புதிய 75 ரூபாய் நாணயம்.. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் வெளியிட்டார் பிரதமர் மோடி
டெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியதை கொண்டாடும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி இன்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கபட்டுள்ள நிலையில் புதிய 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் வெளியிட்டுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியதை கொண்டாடும் விதமாகவும் இந்த நாணயத்தை வெளியிட்டுள்ளார்

டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமை வாயந்தது. தற்போதைய தேவைக்கு ஏற்றபடி இந்த கட்டிடம் இல்லாததால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர். இந்த பணிகள் கொரோனா கால கட்டத்திலும் முழு வீச்சில் நடைபெற்றது.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று ( மே 28) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதற்கான பூஜைகள் உள்பட திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை 7.30 மணி முதல் தொடங்கியது.புதிய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டு ஆதீனங்களால் வழங்கப்பட்ட செங்கோலை நிறுவினார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் விழாவை புறக்கணித்துள்ளன. எனினும், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளும் அக்கட்சியுடன் அனுசரனையாக இருக்கும் கட்சிகளும் விழாவில் பங்கேற்றுள்ளன.
இதனிடையே, டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை முன்னிட்டு மத்திய அரசு 75 ரூபாய் நாணயம் வெளியிட முடிவு செய்தது. இந்த நாணயத்தின் ஒருபுறம் அசோக சின்னமும், அதன் நடுவில் 'பாரத்' என்ற வார்த்தை தேவநாகரி எழுத்திலும், 'இந்தியா' என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு உள்ளது.
இதன் அடியில் ரூபாயின் மதிப்பான '75'- என்ற எண் இடம் பெற்றிருக்கும். இந்த 75 ரூபாய் நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படம் இடம்பெற்றிருக்கும். அதோடு '2023' என்ற ஆண்டும் அச்சிடப்படும். இந்த நாணயத்தின் எடை 34.65 முதல் 35.35 கிராம் வரை இருக்கும் என பொருளாதார விவகாரத்துறை தெரிவித்தது. 44 மில்லி மீட்டர் வட்டம் கொண்ட இந்த 75 ரூபாய் நாணயம் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் துத்தநாகம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications