"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்!
டெல்லி: சுங்க கட்டணம் தொடர்பாக இப்போது புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உரிய நேரத்தில் சுங்க கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றால் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும், வாகனங்களுக்கான பல முக்கிய சலுகைகளும் கூட கட் ஆகும். இந்த புதிய ரூல்ஸ் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது நாடு முழுக்க உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறையில் தான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண வசூல் முறையை மேம்படுத்தவும் பயணிகள் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் இதில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வருகிறது. அதன்படி இப்போது சில முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன.

கடுமையாக்கப்பட்ட விதிகள்
இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இனி கட்டணம் செலுத்தத் தவறினால், அசல் கட்டணத்தைப் போலவே இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படலாம். மேலும், வாகனங்களுக்கும் கூட தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
அந்த அறிவிப்பில், "தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2026 மார்ச் 17ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் தடையற்ற சுங்கச்சாவடி முறையை நோக்கி நகரும் நிலையில், டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் முறையை வலுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய சிஸ்டம்
திருத்தப்பட்ட விதிகளின் கீழ், செலுத்தப்படாத சுங்கக் கட்டணங்களைக் கண்டறிந்து வசூலிக்க ஒரு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சுங்கச்சாவடியை ஒரு வாகனம் கடந்து செல்லும்போது சில காரணங்களால் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றால் அதை வசூலிக்கவே இந்த சிஸ்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலுவைத் தொகையை வசூலிக்க, அதிகாரிகள் பதிவு செய்யப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு இ-நோட்டீஸ் ஒன்றை அனுப்புவார்கள். இந்த அறிவிப்பில் வாகன விவரங்கள், சுங்கச்சாவடியைக் கடந்த தேதி மற்றும் இடம், செலுத்த வேண்டிய தொகை ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த அறிவிப்பு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், மொபைல் செயலிகள் அல்லது ஒரு ஆன்லைன் போர்ட்டல் வழியாக அனுப்பப்படும்.
இரட்டிப்பாகும் கட்டணம்
இந்த மின்னணு அறிவிப்பு கிடைத்த 72 மணி நேரத்திற்குள் வாகன உரிமையாளர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அப்படி 72 மணி நேரத்திற்குள் செலுத்தினால் எந்தவொரு கூடுதல் கட்டணமோ அல்லது அபராதமோ இல்லை. அசல் தொகையைச் செலுத்தினால் போதும். அதேநேரம் இந்த 72 மணி நேரக் காலக்கெடுவைத் தாண்டினால் சிக்கல் தான். 72 மணி நேரம் கடந்துவிட்டால் நாம் செலுத்த வேண்டிய தொகை இரட்டிப்பாகும். எனவே, மிஸ்ஸான கட்டணத்தை விரைந்து செலுத்துவதே சரியான நடைமுறையாக இருக்கும்.
ஒருவேளை நீங்கள் அங்குச் செல்லவே இல்லை. தவறுதலாக உங்களுக்கு நோட்டீஸ் வந்தால், அதைச் சரி செய்யவும் ஒரு சிஸ்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதாவது வாகன உரிமையாளர்கள் இ-நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் தங்கள் ஆட்சேபனையைப் பதிவு செய்யலாம். அதிகாரிகள் இந்த புகாரை ஐந்து நாட்களுக்குள் தீர்க்க வேண்டும். உங்கள் வாகனத்தின் கட்டணம் தான செலுத்தப்படவில்லை என்பது உறுதியானால் நீங்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒருவேளை 20 நாட்களில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றால் சுங்க கட்டணம் தானாகவே ரத்து செய்யப்படும்.
பெரிய சிக்கல்
அடுத்து இதுதான் முக்கியம். அதாவது இ- நோட்டீஸ் கிடைத்து 15 நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் அதுவரை சுங்க கட்டணத்தைச் செலுத்தாமலேயே இருந்தால், கடுமையான விளைவுகள் ஏற்படும். செலுத்தப்படாத நிலுவைத் தொகைகள் VAHAN தளத்தில் பதிவு செய்யப்படும். இதனால் நிலுவைத் தொகை செலுத்தப்படும் வரை, வாகன மாற்றம் அல்லது புதுப்பித்தல் போன்ற வாகன தொடர்பான சேவைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
இந்த குழப்பங்களை எல்லாம் தவிர்க்க ரொம்பவே சிம்பிளாக உங்கள் ஃபாஸ்டேக் (FASTag) ஆக்டிவாக இருப்பதை உறுதி செய்யுங்கள். மேலும், அதில் உங்கள் பயணத்திற்குத் தேவையான நிதி இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை இ நோட்டீஸ் வந்தாலும் உடனடியாக அதில் தேவையான நடவடிக்கையை எடுங்கள்!












Click it and Unblock the Notifications