நன்கொடைக்கு வரி.. தனிநபர் வருமான வரி கணக்கில் பணத்தை திரும்ப பெறும் முறையிலும் அதிரடி மாற்றம்
டெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புதியவருமான வரி சட்ட மசோதா நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மக்களவையின் தேர்வுக் குழுவின் தலைவரான பாஜக எம்.பி., பைஜயந்த் பண்டா நேற்று தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், அறக்கட்டளை நன்கொடை மற்றும் தனிநபர் வருமான வரி கணக்கில் பணத்தை திரும்ப பெறும் முறையில் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது அமலில் உள்ள வருமானவரி சட்டம், 1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த வருமான வரித்துறை சட்டங்கள் பற்றிய புரிதல்கள் சாமானியர்களுக்கு இல்லை.. ஏனெனில் தெளிவான விளக்கங்கள் சட்ட நிபுணர்களுக்கே புரியும் வகையில் தான் இருக்கிறது. இதையடுத்து மத்திய அரசு வருமான வரி சட்டம் என்பது எளிதாக புரியும் வகையிலான விளக்கத்துடனும், வரிசெலுத்துவோருக்கு உகந்ததாகவும் மாற்றும் வகையில், புதிய வருமானவரி மசோதாவை கடந்த பிப்ரவரி 13-ந் தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற நிலைக்குழு
ஆனால் வந்த வேகத்திலேயே அந்த மசோதா, நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜனதா எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையில் 31 உறுப்பினர்களை கொண்ட தேர்வுக்குழு, வருமான வரி மசோதாவை ஆய்வு செய்து வந்தது. அக்குழு, மசோதாவில் 285 யோசனைகளை பரிந்துரைத்துள்ளது. கடந்த 16-ந் தேதி, தேர்வுக்குழு கூட்டத்தில், குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அந்த அறிக்கை, நாடாளுமன்ற லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மக்களவையின் தேர்வுக் குழுவின் தலைவரான பாஜக எம்.பி., பைஜயந்த் பண்டா தான் நேற்று மசோதாவை தாக்கல் செய்தார்.
எத்தனை மாற்றங்கள்
அதில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள 1961-ம் ஆண்டு வருமான வரி சட்டத்தில், பல்வேறு மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடத்தக்க சில அம்சங்களை பார்ப்போம். தற்போதைய வருமானவரி சட்டத்தில் 5 லட்சத்து 12 ஆயிரம் வார்த்தைகள் இருந்தது. ஆனால் புதிய மசோதாவில் 2 லட்சத்து 60 ஆயிரம் வார்த்தைகள் மட்டுமே உள்ளன. அதுபோல், பிரிவுகளின் எண்ணிக்கை 819-ல் இருந்து 536 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் அத்தியாயங்களின் எண்ணிக்கை 47-ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி மசோதாவில் 57 அட்டவணைகள் உள்ளன. 1,200 நிபந்தனைகளும், 900 விளக்கங்களும் நீக்கப்பட்டிருக்கிறது.
வரி விலக்கு
வரிவிலக்குகள், டி.டி.எஸ்., டி.சி.எஸ். தொடர்பான உட்பிரிவுகள், அட்டவணை வடிவத்தில், சாமானியர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. எந்த ஆண்டுக்கான வருமானத்தை கணக்கிடுறோம் என்பதை 'முந்தைய ஆண்டு' என்று தற்போதைய சட்டத்தில் குறிப்பிட்டு வந்தார்கள். அது, 'வரி ஆண்டு' என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது. 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற கருத்தும் நீக்கப்பட்டிருக்கிறது.
நன்கொடைகளுக்கு 30 சதவீத வரி
அதேபோல் லாபநோக்கமற்ற மத-தொண்டு நிறுவனங்கள் தங்கள் நன்கொடைகளுக்கு வரி விதிப்பதில் உள்ள தெளிவின்னைமையை நீக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.அந்த நிறுவனங்களின் ரசீதுகளுக்கு வரிவிதிப்பதை தவிர்த்து, நிகர வருமானத்துக்கு மட்டும் வரி விதிக்கப்படும் வகையில் திருத்தம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட லாபநோக்கமற்ற நிறுவனங்களால் பெறப்படும் நன்கொடைகளில், மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும், மத நோக்கமற்ற நிறுவனங்களால் பெறப்படும் நன்கொடைகளுக்கு 30 சதவீத வரி முன்மொழியப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தனிநபர்கள் வரிக்கழிவு
அதேபோல வரி அறிக்கைகளை தாக்கல் செய்ய தேவையில்லாத தனிநபர்கள், வரிக் கழிவில் பணத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக வருமான வரி மசோதாவில் உள்ள விதியை நீக்க குழு பரிந்துரைத்தது. இது தனிநபர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதை கட்டாயமாக்குகிறது.
வருமான வரி தாக்கல்
மேலும் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய தற்போதைய கட்டாயத் தேவையை இது தவிர்க்கிறது. எனவே உரிய நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்யப்படாத சந்தர்ப்பங்களில் பணத்தை திரும்பப்பெறும் கோரிக்கையை அனுமதிக்கும் நெகிழ்வுத் தன்மையை வழங்க இந்த குழு பரிந்துரைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications