வருமான வரி செலுத்துவது இனி ரொம்ப ரொம்ப ஈஸி.. வரும் 13ஆம் தேதி தாக்கல் ஆகிறது புதிய வருமான வரி மசோதா!
டெல்லி: புதிய வருமான வரி மசோதா வரும் வியாழக்கிழமை அன்று (பிப்ரவரி 13 ஆம் தேதி) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த பழமையான வருமான வரி சட்டத்துக்கு பதிலாக புதிய வருமான வரி சட்டம் கொண்டுவரப்படுகிறது.
12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் இருந்தாலும் வரி கட்ட தேவையில்லை என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அறிமுகமாக இருக்கும் சட்ட மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பிப்ரவரி 7 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

பழைய வருமான வரி சட்டம் கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தச் சூழலில் பழைய சட்டத்துக்கு மாற்றாக புதிய வருமான வரி சட்ட மசோதா நடப்பு கூட்டத் தொடரில் வரும் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
புதிய வருமான வரி சட்டப்படி மாதம் 1 லட்சம் வருமானம் என ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது. மேலும் நிலையான கழிவு 75 ஆயிரத்துடன் சேர்த்து 12 லட்சத்து 75 ஆயிரம் வரை வரி இருக்காது. இந்த மாற்றங்கள் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய மசோதா, நேரடி வரி சட்டத்தை புரிந்துகொள்ள எளிதாக்கும். வரிச்சுமையை குறைப்பதுடன், விதிகள் எளிமையான வாக்கியங்களில் இருக்கும். தற்போது, வருமான வரிச் சட்டம் சுமார் 6 லட்சம் வார்த்தைகளைக் கொண்டுள்ள நிலையில், அது சுமார் 3 லட்சம் வார்த்தைகள் கொண்டதாக பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய வருமான வரி மசோதா வியாழக்கிழமை அன்று நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும்.
இந்த மசோதா நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் முன்னதாகவே தெரிவித்திருந்தார். "குழு தனது பரிந்துரைகளை வழங்கி, அது மீண்டும் வந்து, பின்னர் அமைச்சரவை மூலம் இந்தத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்த புதிய வருமான வரி சட்டம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே அறிவித்திருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, வரி செலுத்துபவர்கள், மக்கள், வரி சம்பந்தமான நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வலைதளமும் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications