கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க டெலி மருத்துவ வசதி: நிர்மலா சீதாராமன்
டெல்லி: கொரோனாவால் மக்கள் மனநலம் சார்ந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ள நிலையில் மனநல ஆலோசனைகளை வழங்க தேசிய அளவில் டெலி மருத்துவ வசதி உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022- 2023 மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

முழுவதும் டிஜிட்டல் முறையிலான காகிதம் அல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவால் சில மக்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அது குறித்து நிர்மலா சீதாராமன் பேசினார். அதாவது தொற்றுநோய் எல்லா வயதினருக்கும் மனநலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளது. தரமான மனநல ஆலோசனை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்த, தேசிய டெலி மென்டல் ஹெல்த் திட்டம் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தேசிய தொலைதூர மனநல திட்டம் நிம்ஹான்ஸ் நோடல் சென்டர் மற்றும் ஐஐடி பெங்களூர் தொழில்நுட்ப ஆதரவுடன் 23 தொலை மனநல மையங்களின் வலையமைப்பை உள்ளடக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் மக்கள் கடந்த இரண்டு ஆண்டுளாக கொரோனா தொற்றினால் அவதிப்பட்டு வருகின்றனர். கொரோனாவால் உடல்நிலை, பொருளாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் சிலர் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பயந்து பலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனை தடுப்பதற்கு மனநல ஆலோசனை மிகவும் அவசியமாகிறது. தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளபடி தேசிய தொலைதூர மனநல திட்டம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும்.












Click it and Unblock the Notifications