எப்புடறா! ஐநா மாநாட்டில் கைலாசா பிரதிநிதி! வேற லெவலுக்கு சென்ற நித்தியானந்தா.. ஸ்டன் ஆன உலக நாடுகள்
ஐநா சபை மாநாட்டில் கைலாசா பிரதிநிதி கலந்து கொண்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
டெல்லி: ஐநா சபையின் மாநாடு ஒன்றில் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்று சொல்லி அதன் பிரதிநிதியாகப் பெண் ஒருவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் நித்தியானந்தா. பாலியல் வழக்குகளில் சிக்கிய இவர், வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இப்போது அவர் எங்கு இருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.
அவ்வப்போது அவரை முன்னிறுத்தும் வகையிலான ஆன்மீக வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். இடையில் திடீரென இந்துக்களாகத் தனியாக ஒரு நாட்டையும் உருவாக்கப் போவதாக அறிவித்தார்.

கைலாசா
அதன்படி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்த அவர், இந்து மக்களை இது ஒன்றிணைக்கப் போவதாகவும் அறிவித்தார். அத்துடன் நிற்காமல் கைலாசா நாட்டிற்குத் தனிக்கொடி, நாணயம், வெளியுறவுத்துறை என வரிசையாக வெளியிட்டு ஷாக் கொடுத்தார். இதற்கிடையே அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் ஐநா மாநாட்டில் கைலாசா பிரதிநிதி என்று கூறிக் கொண்டு பெண் ஒருவர் கலந்து கொண்டு இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என்று சொல்லி அதன் பிரதிநிதியாகப் பெண் ஒருவர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறார்.

ஐநா மாநாட்டில் கைலாசா பிரதிநிதி
இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டு, தலைமறைவாக இருக்கும் ஒருவர் உருவாக்கியதாகச் சொல்லப்படும் நாட்டின் பிரதிநிதி ஐநா சபை மாநாட்டில் கலந்து கொண்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. கைலாசாவுக்கு தான் தலைவர் என்று நித்தியானந்தாவே அறிவித்துக் கொண்டார். அதேநேரம் இந்த கைலாசாவை ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து உள்ளதா இல்லையா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. அதேபோல கைலாசா எங்கே இருக்கிறது. அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என எதுவுமே யாருக்கும் தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கைலாசா பிரதிநிதி
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த மாநாட்டில் மா.விஜயப்ரியா நித்தியானந்தா என்ற பெண், 19வது ஐக்கிய நாடுகளின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் கூட்டத்தில் கைலாசா நாட்டின் சார்பில் கலந்து கொண்டார். ஐநா சபை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், விஜயப்ரியா கைலாசத்தின் நிரந்தர தூதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சி குறித்து நடந்த மாநாட்டில் பேசிய அவர், இந்து மதத்தில் நிலையான வளர்ச்சி குறித்துப் பேசப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்துக்களுக்குத் தனியாக ஒரு நாட்டை நித்தியானந்தா உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தடுக்கும் நடவடிக்கை
அவர் மேலும் கூறுகையில், "கைலாசாவை நித்தியானந்தா உருவாக்கினார். விவசாய பழங்குடியினர் உட்பட இந்து மதத்தின் 10,000 பாரம்பரியங்களையும் புதுப்பிக்கும் நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். இந்து கொள்கைகளால் கைலாசா நிலையான வளர்ச்சியில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இந்து மதத்தின் பூர்வீக மரபுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் புதுப்பிப்பதற்காக, கைலாசா தலைவர் (நித்தியானந்தா) கடுமையான துன்புறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டார். பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டு,, பிறந்த நாட்டில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

150 நாடுகள்
நித்தியானந்தா மற்றும் கைலாசத்தில் உள்ள 20 லட்சம் புலம் பெயர்ந்த இந்து மக்களைத் துன்புறுத்துவதைத் தடுக்க தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இந்து மதத்தின் கொள்கைகளை உலக நாடுகள் கேட்க வேண்டும். கைலாசா இதுவரை 150 நாடுகளில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிறுவியுள்ளது" என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் நபர் உருவாக்கியதாகச் சொல்லப்படும் நாட்டின் பிரதிநிதி சர்வதேச அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

நித்தியானந்தா
நித்தியானந்தா மீது பலாத்கார குற்றச்சாட்டுகள் இன்னும் நிலுவையில் உள்ளன.. கர்நாடக அமர்வு நீதிமன்றம் கடந்த 2010இல் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது. அவரது முன்னாள் ஓட்டுநர் லெனின் அளித்த புகாரின் அடிப்படையில், நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். இருப்பினும், சில காலத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே நித்தியானந்தா நாட்டை விட்டு வெளியேறியதைச் சுட்டிக்காட்டி லெனின் மீண்டும் மனுத்தாக்கல் செய்த நிலையில், அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவரது குஜராத் ஆசிரமத்திலும் அத்துமீறல்கள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications