என்னது மைக்கை ஆஃப் செய்தோமா? மம்தா சொல்வது எல்லாமே பொய் தான்.. கண்சிவந்த நிர்மலா சீதாராமன் பதிலடி
டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் தனது மைக் ஆஃப் செய்யப்பட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மம்தா பானர்ஜியின் மைக்கை நாங்கள் ஆஃப் செய்யவில்லை. அவர் முதலில் உண்மையை பேசி பழக வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளதோடு, நிதி ஆயோக்கில் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை ‛இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் மாநில முதல்வர்கள் புறக்கணித்தனர். பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாருக்கு மட்டுமே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இதனால் நிதி ஆயோக்கை புறக்கணிப்பதாக அவர்கள் அறிவித்தனர்

அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் புறக்கணித்தனர்.
"திடீர் மைக் ஆஃப்".. நிதி ஆயோக்கில் கொந்தளித்த மம்தா பானர்ஜி.. கோபமாக வெளிநடப்பு.. என்ன நடந்தது?
இருப்பினும் இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசின் அழைப்பை ஏற்று இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அதன்படியே அவர் இன்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி மம்தா பானர்ஜியும் பேசினார். அவருக்கு 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. எனக்கு 5 நிமிடங்கள் மட்டும் தான் பேச அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறக எனது மைக் ஆஃப் செய்யப்பட்டது. இதனால் வெளிநடப்பு செய்தேன் என்று கூறினார். மம்தா பானர்ஜியின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இதனால் இந்த விவகாரம் என்பது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் மம்தா பானர்ஜியின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. மம்தா பானர்ஜி பத்திரிகையாளர் சந்திப்பில் மைக் ஆஃப் செய்யப்பட்டதாக பொய் சொல்லி உள்ளார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
‛‛நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அவர் பேசியதை நாங்கள் அனைவரும் கவனித்தோம். ஒவ்வொரு முதல்வர்களுக்கும் கூட்டத்தில் பேசுவதற்கான நேரம் என்பது ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த நேரம் குறித்த விபரம் முதல்வர் டேபிள் முன்புள்ள ஸ்கிரீனில் டிஸ்பிளே செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவர் (மம்தா பானர்ஜி) கூட்டத்தில் மைக் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். அது முற்றிலும் பொய்யான தகவல். மம்தா பானர்ஜி இப்படி சொல்லி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவர் உண்மையை பேச வேண்டும். அதை விட்டு விட்டு மறுபடியும் பொய்யை அடிப்படையாக கொண்ட கதையை உருவாக்க கூடாது’’ என விளாசினார்.












Click it and Unblock the Notifications