நம்பிக்கையில்லா தீர்மானம்: ட்விஸ்ட் வைத்த காங்கிரஸ்.. ராகுல் இல்லை.. முதல் நபராக பேசிய எம்.பி யார்?
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் எம்.பி கெளரவ் கோகாய் பேசி வருகிறார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியதில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் இன்றி சென்று கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்கியது. நம்பிக்கயிலா தீர்மானத்தில் முதல் நபராக ராகுல் காந்தி பேசுவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறின. தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி நேற்றுதான் அவை நடவடிக்கையில் பங்கேற்றார்.

இரண்டாவது நாளான இன்று ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தை தொடங்க இருப்பதாக வெளியான தகவல் காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டும் இன்றி எதிர்க்கட்சியின் இந்தியா கூட்டணி எம்.பிக்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று அவை கூடியதும் அமளியால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடியதும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது.
விவாதத்தில் முதல் நபராக ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் முதலில் பேசினார். கவுரவ் கோகாய்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முதலில் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ராகுல் காந்தி ஏன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடங்கி வைத்து பேச வில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பினார்.
எனினும், தொடர்ந்து பேசி வரும் கெளரவ் கோகாய், எதற்காக இந்த தீர்மானம் என்று பேசி வருகிறார். அசாம் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று என்பதால் அந்த மாநிலத்தை சேர்ந்த கெளரவ் கோகாய்-யை வைத்து காங்கிரஸ் விவாதத்தை தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது. மக்களவையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பிக்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications