கொரோனா வைரஸ் தொற்று பரவல் இந்தியாவில் அதிகரிக்கவில்லை.. சுகாதார நிபுணர்கள் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் திடீரென கோவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் இதனை மறுத்துள்ள சுகாதாரத்துறை நிபுணர்கள், அவ்வப்போது பதிவாகும் கேஸ்கள் தொடர்பான தகவல்கள்தான் இது. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதாகவும், புதிய வேரியண்ட்கள் கண்டறியப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இப்படி இருக்கையில்தான் சுகாதார நிபுணர்கள், கோவிட் 19 தொற்று பரவல் குறித்த அச்சப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளனர். டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
"நிலைமை இப்போது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. சில நேரங்களில் அதிகபட்ச கேஸ்கள் வருகிறது. ஆனாலும் அது கூட எளிதாக கையாளும் வகையில்தான் இருக்கிறது. தொற்று பாதிப்புக்கு உட்பட்டவர்கள் யாரும் ஐசியு பிரிவிலோ, மற்ற வார்டுகளிலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில்லை. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். இப்போதைய சூழலில் கோவிட் தொற்று பருவக்கால காய்ச்சல் என்கிற அளவில்தான் இருக்கிறது. தொற்று பாதிப்பை எளிதாக குணப்படுத்த முடியும். பயப்பட எதுவும் இல்லை. பீதியடைய வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
சர் கங்காரம் மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவின் இணை இயக்குநர் டாக்டர் தீரன் குப்தா இது குறித்து பேசுகையில், "தென்கிழக்கு ஆசியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால், இந்தியாவில் இது இன்னும் ஆபத்தான கட்டத்தை எட்டவில்லை. இங்கு நோயாளிகள் உடல்வலி, சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் வருகிறார்கள். எனவே இது அச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல" என்று கூறியுள்ளார்.
தொற்று பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதால் டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவுக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது வழக்கமான ஒன்றுதான் இது தொடர்பாக கவலைப்பட எதுவும் இல்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் சமீபத்தில் LF.7 மற்றும் NB.1.8 இரண்டு கொரோனா வைரஸ் திரிபுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், உலக சுகாதார மையம், இந்த திரிபுகள் ஆபத்தானவை கிடையாது என்று கூறியிருந்தது. ஆனால் தொடர்ந்து கண்காணிக்கபட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications