"பூஸ்டர் டோசை யாருமே போடுவதில்லை".. 10 கோடி மருந்துகள் வீண்.. சீரம் நிறுவன சி.இ.ஓ கவலை
டெல்லி: பூஸ்டர் டோஸ் போட யாருமே முன்வரவில்லை என்றும் மக்கள் சலிப்படைந்துவிட்டனர் என்றும் இதனால் 10 கோடி மருந்துகள் காலாவதியாகிவிட்டதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடுருவியது. அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், கடும் பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியப்பட்டு மக்களுக்கு போடத் துவங்கிய பிறகே கொரோனா பரவலின் வேகம் மெல்ல மெல்ல தணிந்தது. அதன்பிறகே நாடு முழுவதும் ஏன் உலக அளவில் படிப்படியாக இயல்பு நிலை ஏற்பட்டது. இந்தியாவில் முதன் முதலாக புனேவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் தாயரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சினுக்கும் தான் அனுமதி வழங்கப்பட்டது.

2 டோஸ் தடுப்பூசிகள்
அதிலும் பெரும்பாலும் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிக அளவில் வழங்கப்பட்டது. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்திய நிறுவனமும் உற்பத்தியை அதிகரித்து முழு வீச்சில் சப்ளை செய்தது. பிறகு வெளிநாடுகளுக்கும் அனுமதி அளித்தது. இரண்டு டோஸ்களாக போடப்பட்டு வந்த தடுப்பூசிகள் தற்போது இந்தியாவிலும் பெரும்பாலும் போடப்பட்டு விட்டது.

யாருமே முன்வரவில்லை
கொரோனா இந்தியாவில் குறையத்தொடங்கியதையடுத்து தடுப்பூசி போடும் ஆர்வமும் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது. தொடர்ந்து கொரோனாவின் உறுமாறிய கொரோனா பரவ தொடங்கியது. இதனால் பூஸ்டர் டோஸ்கள் போடுவது மத்திய அரசு இலவசமாக அறிவித்தது. இருந்தாலும் தடுப்பூசி போட மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துவிட்டது. இந்த நிலையில், கொரோனா பூஸ்டர் டோஸ் போட யாருமே முன்வரவில்லை என்றும் மக்கள் சலிப்படைந்துவிட்டதாகவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஒ அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

10 கோடி டோஸ் மருந்துகள்
இது தொடர்பாக வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு இடையே பேசிய அதார் பூனவல்லா கூறியதாவது:- 2021 டிசம்பர் மாதம் முதலே கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. அன்றைய கால கட்டத்தில் சில கோடி டோஸ் மருந்துகள் இருந்தன. இவற்றில் 10 கோடி டோஸ் மருந்துகள் ஏற்கனவே காலாவதி ஆகிவிட்டது. பூஸ்டர் டோஸ்களுக்கு தற்போது தேவை குறைந்துவிட்டது. மக்கள் சலிப்படைந்து விட்டனர். வெளிப்படையாக சொன்னால் எனக்கும் கூட சலிப்பு தட்டிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications