ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: வரும் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலோடு அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவுக்கு கடந்த 11 ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், வரும் 16 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் லோக்சபாவில் தாக்கல் செய்ய உள்ளார்.
நம் நாட்டில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு மாநில சட்டமன்றத்துக்கும் பதிவிக்காலம் நிறைவடையும் போது, அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு ஆண்டுகளில் தேர்தல் நடத்தப்பட்டு வருவதால் அதிக பொருட் செலவு ஏற்படுவதாகவும், மேலும் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போவதாகவும் கூறிய மத்திய பாஜக அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்தது.
இந்த ஒரே நாடு ஒரே தேர்தலானது, நாடாளுமன்ற தேர்தலோடு அனைத்து சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்கிறது. இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால் லோக்சபாவில் எப்போது வெண்டுமானாலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்க செய்ய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேறி, எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 2029 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. எனினும், தற்போதைய பாஜக கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை என்பதால் இந்த மசோதா நிறைவேறுமா? என்பதையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது.












Click it and Unblock the Notifications