இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்.. "ஆபரேஷன் அஜய்" 3வது கட்டமாக 197 பேர் இந்தியா வந்தனர்.. மத்திய அரசுக்கு நன்றி
டெல்லி: ‛ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 3வது கட்டமாக தமிழர்கள் 22 பேர் உள்பட 197 இந்தியர்கள் 3 விமான மூலம் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தால் ஏற்கனவே 212, 235 பேர் என மொத்தம் 447 பேர் வந்த நிலையில் இப்போது 197 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை திடீர் தாக்குதலை நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலால் ஒரு நொடி அதிர்ந்து போன இஸ்ரேல், பின்னர் பதில் நடவடிக்கையாக காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேலின் பதில் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தின் காஸா, மேற்கு கரை பகுதிகளை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரால் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதன்படி, காசா மீது இஸ்ரேல் ராணுவம் சரமாரி வான்தாக்குதலை தொடுத்து வருகிறது.
இஸ்ரேல் போர் விமானங்களின் இடைவிடாத குண்டுமழையால் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் தரைமட்டம் ஆகி வருகின்றன. இதனிடையே வான்வழி தாக்குதலுடன் காசா மீது தரைவழி தாக்குதலையும் தொடுக்க இஸ்ரேல் தயராகி வருகிறது. இதற்காக எல்லை பகுதியில் 3 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவ வீரர்களை இஸ்ரேல் நிலை நிறுத்தியுள்ளது.
தற்போது வரை இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது. மேலும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்று 9 வது நாளாக போர் என்பது நடந்து வருகிறது. தற்போது காசாவை முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் படையினர் இன்று முதல் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே பெரிய அளவில் துப்பாக்கிச்சண்டை நடக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இந்தியா இறங்கி உள்ளது. இஸ்ரேலை பொறுத்தமட்டில் 18 ஆயிரம் இந்தியர்கள் அங்கு இருக்கின்றனர். இவர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு விமானம் முதற்கட்டமாக 212 பேரை இஸ்ரேலின் டெல்அலிவ் நகரில் இருந்து பத்திரமாக மீட்டு வந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 2 வது விமானம் இஸ்ரேலின் டெல் அலிவ் நகரில் இருந்து புறப்பட்டது. இதில் 235 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இதன் தொடர்ச்சியா இன்று 3 விமானங்கள் மூலம் இஸ்ரேலில் இருந்து 197 இந்தியர்கள் மீட்கப்படுள்ளனர். இன்று காலை டெல்லி வந்தடைந்த 197 இந்தியர்களில் 11 பெண்கள் உள்பட 22 பேர் தமிழர்கள் ஆவர்.
இஸ்ரேலில் இருந்து பத்திரமாக இந்தியா வந்தடைந்தனர். மேலும் அவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டினர். இதேபோல் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் தூதரகங்களை தொடர்பு கொண்டால் இந்தியாவுக்கு பத்திரமாக திரும்பலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.














Click it and Unblock the Notifications