"ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது.." தலைமை தளபதி பரபர பேச்சு! இந்திய ராணுவம் குறித்தும் முக்கிய கருத்து
டெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராகக் கடந்த மே மாதம் இந்தியா வெற்றிகரமாக ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. இது இந்தியப் பாதுகாப்புத் துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் அடுத்த வாரம் நடக்கவுள்ளது. இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்வதாக முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கையை எடுத்தது. அதில் குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 11 தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. அதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் சிந்தூர்
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடக்க இருக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தைத் தொடக்கி வைக்கிறார். பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசவுள்ளனர்.
இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டே இருப்பதாக முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்புப் படைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். போர் குறித்து இந்திய விமானப்படை மற்றும் விமானச் சக்தி ஆய்வுகள் மையம் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பேசிய ஜெனரல் சவுஹான், போரில் யாரும் இரண்டாம் இடம் பெற முடியாது என்றும் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது
தொடர்ந்து பேசிய அவர், "எந்த ஒரு ராணுவமும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் ஆபரேஷன் சிந்தூர். இந்த நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. நாம் எப்போதும் உச்சபட்சத் தயார் நிலையில் இருக்க வேண்டும். 365 நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.
எதிர்காலத்தில் ராணுவத்திற்குத் தகவல் வீரர்கள், தொழில்நுட்ப வீரர்கள் மற்றும் அறிவார்ந்த வீரர்கள் தேவைப்படுவார்கள். இப்போது உலகில் போர் முறை மாறி வருகிறது. மாறி வரும் போர் முறைக்கு ஏற்ப நமக்கு வரும் காலத்தில் இந்த வீரர் தகவல், தொழில்நுட்பம் வீரர்கள் தேவை. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டி இருக்கும்.
ராணுவத்தில் புரட்சி
உலகெங்கும் ராணுவம் இப்போது மூன்றாவது புரட்சியின் விளிம்பில் நிற்கிறது. அதற்கேற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். நிலம், கடல், வான்வெளி, இணையம், விண்வெளி மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை ஒருகிணைக்கும் வகையில் இந்த மூன்றாவது புரட்சி இருக்கிறது. வழக்கமான ராணுவ வீரர்களைப் போல இல்லாமல்.. வரும் காலத்தில் வீரர்கள் தொழில்நுட்பப் பிரிவு, தகவல் மற்றும் உளவியல் போரிலும் திறமையான நபர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலப் போரில் ஆதிக்கம் செலுத்த முடியும். அதற்கேற்ப நவீன வீரர்கள் பன்முகத் திறமை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
புதிய போர் முறை
குறிப்பாக இப்போது தகவல் வீரர்களின் தேவை அதிகரித்து வருகிறது. உலகெங்கும் பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைத் தடுக்கவும் பொய்ச் செய்திகளை அம்பலப்படுத்தி உண்மை செய்திகளைப் பரப்பவும் தகவல் வீரர்கள் தேவைப்படுகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத இந்தப் போர்க்களத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. இந்த புதிய மாற்றத்திற்கு ஏற்க தவறினால், பாதுகாப்பு மற்றும் சர்வதேச செல்வாக்கு என இரண்டிலும் நாடுகள் பின்தங்கிவிடும்" என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
