கனிமொழிக்கு முக்கிய பொறுப்பு.. பாகிஸ்தானின் பொய்களை முறியடிக்க மத்திய அரசு வழங்கிய பதவி
டெல்லி: நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இந்த பொய்களை முறியடிக்கும் வகையில் மத்திய அரசு 7 எம்பிக்கள் தலைமையில் அனைத்து கட்சி குழுவை அமைத்துள்ளது. இதில் ஒரு குழுவின் தலைவராக திமுகவின் கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்று ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துரைத்து பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்க உள்ளனர். இந்த குழுக்களின் பணி என்ன? யார் யார் தலைவர்கள்? என்பது பற்றிய விபரம் வருமாறு;
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு கடந்த 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து பாகிஸ்தான் கெஞ்சியதால் நம் நாடு சண்டையை நிறுத்தியது. இப்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது.
இந்த மோதலில் பாகிஸ்தான் நம் நாட்டிடம் சம்மட்டி அடி வாங்கியது. ஆனாலும் கூட பாகிஸ்தான் மீசையில் மண் ஒட்டவில்லை என்றும், நம் நாட்டுடன் மோதலில் வெற்றி பெற்றதாகவும் மார்த்தட்டி வருகிறது. அதுமட்டுமின்றி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பொய் மற்றும் அவதூறுகளை பரப்பும் பணியை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நம் நாடு பாகிஸ்தானின் அப்பாவிகளை குறிவைத்து தாக்கி உள்ளது. நம் நாட்டின் தாக்குதலில் அப்பாவிகள் இறந்துள்ளனர். மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் இந்தியாவின் ராணுவ மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டுள்ளது என்று பொய்களை அள்ளிவிடுகிறது. இதுதொடர்பாக உலக நாடுகளை நம்ப வைக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.
பாகிஸ்தானின் இந்த பொய் பிரசாரங்களை முறியடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து கட்சி எம்பிக்களை உள்ளடக்கி மொத்தம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருகுழுவை கனிமொழி எம்பி தலைமையேற்று வழிநடத்த உள்ளார். இந்த குழுவினர் வெளிநாடுகளுக்கு சென்று ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துரைத்து பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களை முறியடிக்க உள்ளனர்.
கனிமொழி எம்பியை தவிர காங்கிரஸ் எம்பி சசிதரூர், பாஜகவின் ரவி சங்கர் பிரசாத் எம்பி, பைஜெயந்த் பாண்டா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பியான சஞ்சய் குமார் ஷா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, சிவசேனாவின் ஸ்ரீகண்ட் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டவர்கள் குழுக்களை வழிநடத்த உள்ளனர். இதில் ஒவ்வொரு குழுக்களிலும் 5 முதல் 6 எம்பிக்கள் வரை இடம்பெறுவார்கள். இவர்கள் அமெரிக்கா, பிரிட்டன், தென்ஆப்பிரிக்கா, கத்தார், ஐக்கிரஅரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்க மே 22ம் தேதிக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் பின்னணி பற்றியும், பாகிஸ்தானின் பொய் பிரசாரங்களையும் முறியடிக்க உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ இன்று அறிவித்தார்.‛‛மிக முக்கியமான தருணங்களில் பாரதம் ஒற்றுமையாக நிற்கிறது'' என்று அவர் குழு பற்றிய அறிவிப்பை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதோடு, ‛‛ஏழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் விரைவில் முக்கிய நட்பு நாடுகளுக்கு சென்று பயங்கரவாதத்துக்கு எதிரான நம் நிலைப்பாடு, பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை அரசியல் கடந்த எடுத்து செல்ல உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications