ஆபரேஷன் சிந்தூர்.. 4 நாட்களில் 40 பாகிஸ்தான் வீரர்கள் பலி.. இந்திய ராணுவம் தகவல்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே நிலவி வந்த போர் நிறுத்தப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களில் மட்டும் இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா தரப்பில், ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் வெடித்தது. இதனிடையே நேற்று மாலை இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன என்று அறிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றன. ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் டிரோன் பறந்தன. பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியாவும் அறிவிப்பு வெளியிட்டது.
பாகிஸ்தான் தாக்குதலில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆங்காங்கே உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை. இப்போதும் தொடர்கிறது. பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலை முறியடித்து அவ்வப்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இந்திய ராணுவத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் 9 தீவிரவாதி முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏர் மார்ஷல் ஏ.கே பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பாகிஸ்தானில் இருந்து இந்திய விமானப்படை தளங்களை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இதற்கு இந்தியா தரப்பில் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 35-40 வீரர்கள் (மே 7 - 10 வரை) உயிரிழந்துள்ளனர்." என்றனர்.
டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய ராணுவம் கடந்த 7 ஆம் தேதி நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் யூசப் அசார், அப்துல் மாலிக், முதசர் அகமது உள்ளிட்ட முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்." என்றார். பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications