பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து தொடரும் அமளி - 2 வது முறையாக ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை
டெல்லி: பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் நாடாளுமன்ற மாநிலங்களவை 2 வது முறையாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 வது அமர்வு வார விடுமுறைக்கு பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இன்று கூடியது. அவை கூடியவுடன் புதிதாக 6 மாநிலங்களவை எம்.பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பவித்ரா மார்கெரிடா, வங்ரா நர்ஜாரி, கேரளாவை சேர்ந்த ஜெபி மதர் ஹிஷாம், சந்தோஷ் குமார், ஏ.ஏ.ரஹீம், நாகாலாந்தை சேர்ந்த எஸ்.ஃபாங்னான் கோன்யாக் ஆகியோர் புதிய எம்.பிக்களாக பொறுப்பேற்றனர்.

அப்போது பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவின் இருக்கை அருகே அருகே சென்று எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பியதால் அவையை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையை 2 மணி வரை வெங்கய்யா நாயுடு ஒத்திவைத்தார்.
மறுபக்கம் நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறக்கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மக்களவை திமுக எம்.பி.க்கள் ஆளுநருக்கு எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications