பிஎம் கிசானில் இத்தனை லட்சமா? சபாஷ் பிரதமரின் கிசான் சம்மன்.. மத்திய அரசின் "100 நாள் சக்ஸஸ்" பாருங்க
டெல்லி: பிரதமா் மோடி தலைமையில் 3வது முறையாக அரசு அமைந்தவுடன் 100 நாள் காலக்கெடுவுடன் முடிக்கப்படவேண்டிய திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில், அவைகள் செயல்வடிவம் பெற்றன. இதையடுத்து, 100 நாள் இலக்கில் எட்டப்பட்ட சாதனைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான்.. எனவேதான், விவசாயிகளின் நலனில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஏராளமான நலத்திட்டங்களையும், கடனுதவியையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.

பிஎம் கிசான்: இதில் பிரதானமானது, பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமும் ஒன்றாகும். விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு. அதேபோல, விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதுதான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம்.
அந்த வரிசையில், PMFBY என்று சொல்லக்கூடிய பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டமும் மிக முக்கியமான திட்டமாகும்.. பருவநிலை மற்றும் நோய் தாக்குதல் காரணமாக பயிர் செய்திருக்கும் விவசாயிகள் நஷ்டமடைவதை பயிர்காப்பீடு தடுக்கிறது
பிரதமர் மோடி: இதனிடையே, பிரதமா் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக அரசு அமைந்தவுடன் 100 நாள் காலக்கெடுவுடன் முடிக்கப்படவேண்டிய திட்டங்கள் வகுக்கப்பட்டன.. இந்த இலக்குடன் அடையப்பட்ட சாதனைகளை மத்திய அரசின் அமைச்சகங்கள் வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமரின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் (பி.எம். கிஸான் சம்மான் நிதி) கூடுதலாக 25 லட்சம் விவசாயிகள் கடந்த 100 நாள்களில் சோ்க்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்திருப்பதாவது:
"வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மேம்பாட்டிற்காக அமைச்சகம் ஆறு அம்ச உத்திகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதில் அரசின் 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதம மந்திரி கிஸான் திட்டம்(பிஎம் கிஸான்) குறித்து பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இதனால், இந்தத் திட்டத்தில் புதிதாக 25 லட்சத்திற்கும் அதிகமான புதிய விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனா்.
விவசாயிகள்: ஏற்கெனவே 9.26 கோடி விவசாயிகள் பயனாளிகளாக இருக்க இவா்களை இணைத்தபிறகு, தற்போது விவசாயிகள் எண்ணிக்கை 9.51 கோடியாக உயா்ந்துள்ளது. பிரதமா் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டவுடன் 9.26 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாய கௌரவ நிதியான ரூ.21,000 கோடியை பிரதமா் விடுவித்தாா்.
கூடுதலாக இந்த பிஎம் கிஸான் தொடா்பான உதவிகளுக்கு விவசாயிகளின் வட்டார மொழியில் உதவ செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப அடிப்படையில் "கிஸான்-இமித்ரா" என்கிற குரல் அடிப்படையிலான வசதியும் விவசாயிகளுக்கு செய்யப்பட்டு, 82 லட்சத்திற்கு அதிகமான விசாரணைகளில் 50 லட்சம் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.
வேளாண்மை: 140 கோடி நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பையும் வழங்குவது அரசின் மிகப்பெரிய பொறுப்பு என்பதால் விவசாயிகள்தான் வேளாண்மையின் ஆன்மா. இவா்களுக்காக 3 மடங்கு அதிகமாக உழைப்பேன் என பிரதமா் மோடி செங்கோட்டையில் உரையாற்றும்போது கூறினார்.. அவரை போலவே வேளாண் துறையில் உள்ள அத்தனை பேரும் உழைக்க உறுதிமொழி எடுத்தோம். முதல் 100 நாள்களில் பல்வேறு முயற்சிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
விவசாயிகளின் நலன் மற்றும் வேளாண் மேம்பாட்டிற்காக 6 அம்ச உத்திகளை அறிமுகப்படுத்தினோம். உற்பத்தியை அதிகரிப்பது, பருவ நிலைக்கு உகந்த, பூச்சி எதிா்ப்பு மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய 109 வகையான 65 பயிா்களின் புதிய விதைகள் அா்ப்பணிக்கப்பட்டன. அதேபோல உற்பத்தி செலவை குறைத்து உற்பத்தியைப் பெருக்குவது, விவசாயிகளுக்கு மலிவாக உரங்களை வழங்குவது போன்றவையும் அடங்கும் .
டிஏபி விலை: குறிப்பாக, ஒரு மூட்டை யூரியா ரூ.2,366-ஆக இருந்ததை ரூ.266-க்கு விவசாயிகளுக்கு கிடைக்க வழிசெய்யப்பட்டுள்ளது.. டிஏபி விலை 2,433 என்றிருந்த நிலையில், தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது.. எண்ம வேளாண்மை இயக்கம் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. விவசாயிகள் பயனடைய இறக்குமதி, ஏற்றுமதி வரிகளில் தேவையான மாற்றங்கள் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளன. பணிகள்.
குறைந்தபட்ச ஆதரவு விலையில் உறுதியான கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு இரட்டை வருமானத்தை உயா்த்தும் அரசின் இலக்கிற்கும், அதே சமயத்தில் தானியங்கள், வெங்காயம் உள்ளிட்டவற்றின் இருப்பை நிலை நிறுத்தியதின் மூலம் விலைவாசியையும் அரசு கட்டுக்குள் வைத்திருக்கிறது.
எண்ணெய் வித்துக்கள்: நடப்பு வருடம் பருவ மழை சிறப்பாக இருந்தது... எனவே காரீஃப் நெல் விளைச்சல் அதிகரிக்கும்... சில மாநிலங்களில் பெய்த கனமழையால் பயிா்ச் சேதம் ஏற்பட்டிருந்தாலும் உற்பத்தி குறைய வாய்ப்பில்லை.. ஆகமொத்தம், கடந்த வருடத்தைவிட நெல் உற்பத்தி சிறப்பாகவே இருக்கும்.. எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள், சிறு தானிய வகைகளிலுமே இதேபோன்ற விளைச்சல் கொண்டிருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்.












Click it and Unblock the Notifications