இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட கடிதம்
டெல்லி: பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானின் விவசாயத்துக்கு 80 சதவீதம் சிந்து நதியையே நம்பி இருப்பதால் பாகிஸ்தான் கதற ஆரம்பித்தது. இந்த நிலையில் இந்தியாவிடம் கெஞ்ச ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான். சிந்து நநி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 22 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காமிற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு நடத்தியது தெரியவந்தது.

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் கலங்கி போனது. பாகிஸ்தானின் 80 சதவீதம் விவசாயம் சிந்து நதி நீரையே நம்பி உள்ளது. சிந்து நதி நீரை நிறுத்தினால் பாகிஸ்தான் பாலைவனம் ஆகும் என்ற அச்சத்தில் அலற தொடங்கியது.
பாகிஸ்தானின் பெரும்பாலான குடிநீர் தேவையும் சிந்து நதி நீரை நம்பியிருந்ததால், பாகிஸ்தான் புலம்பி தீர்த்தது. உலக வங்கியை நாட இருப்பதாகவும் பாகிஸ்தான் கூறியது. இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகின. பயங்கரவாத முகாம்கள் மீதான இந்தியாவின் தாக்குதலால், பாகிஸ்தானுக்கு கோபம் வந்தது.
இந்தியாவுக்கு கடிதம்
இந்தியா மீது டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்தது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலை இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்தது. இந்தியா நடத்திய பதிலடியில் பாகிஸ்தான் அச்சம் அடைந்து பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் சிந்து நதி நீர் நதி ஒப்பந்தம் உள்பட பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று இந்தியா கூறியது.
இதனால் கலங்கி போயிருக்கும் பாகிஸ்தான், தற்போது இறங்கி வந்துள்ளது. பாகிஸ்தான் நீர்வளத்துறை அமைச்சகம், இது தொடர்பாக இந்தியாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்
சிந்து நதி நீர் ஒப்பந்தம் கடந்த 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் கையெழுத்தானது. இந்த உடன்படிக்கையில் அப்போதைய இந்திய பிரதமர் நேரு, பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான், உலக வங்கி சார்பில் இலிப் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் 6 ஆறுகளை பயன்படுத்துவது தொடர்பாக தீர்வு காணப்பட்டது.
மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய 3 ஆறுகளின் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆறுகளின் நீரை இந்தியா மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் மற்றும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம். கிழக்கு ஆறுகளான ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 ஆறுகளின் நீர் முழுவதையும் இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நதிகளில் இருந்து எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications