'மோடி நினைத்தால் மறுநொடி.. பாகிஸ்தான் கிரிக்கெட் க்ளோஸ்..' பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் பகீர்
டெல்லி: இந்தியப் பிரதமர் மோடி நினைத்தால் ஐசிசி அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்குக் கிடைக்கும் நிதியைத் தடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிக்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்,
பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது மிக மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
அப்போது முதலே பல்வேறு நாடுகளும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்து வந்தனர். சமீபத்தில் கூட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பாதுகாப்பு காரணங்களால் தங்கள் சுற்றுப் பயணத்தைக் கடைசி நிமிடத்தில் ரத்து செய்திருந்தன.

பாகிஸ்தான் கிரிக்கெட்
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிலையில், அதன் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ரமீஸ் ராஜா, இந்தியப் பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அழிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற நிலைக்குழுவில் பேசிய கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு 50% நிதி ஐசிசி அமைப்பிடம் இருந்து தான் வருகிறது.

மோடி நினைத்தால்
ஐசிசிக்கு சுமார் 90% நிதி இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அமைப்பிடம் இருந்து வருகிறது. சொல்லப்போனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை மறைமுகமாக இந்தியா தான் நடத்துகிறது எனச் சொல்லலாம். என்றாவது ஒரு நாள் பாகிஸ்தானுக்கு எந்த நிதியும் செல்லக் கூடாது என இந்திய பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் அழிந்துவிடும்" என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி அமைப்பைப் பெரியளவில் நம்பியிருப்பது ஆபத்தானது என்று ரமீஸ் ராஜா தொடர்ந்து கூறி வருகிறார்.
Recommended Video

உள்நாட்டு முதலீடு பூஜ்ஜியம்
முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் பேசிய ரமீஸ் ராஜா, "பாகிஸ்தான் கிரிக்கெட் இப்போது ஐசிசி அளிக்கும் நிதியையே அதிகம் நம்பியுள்ளது. உள்ளூர் அமைப்புகளிடம் இருந்து வரும் தொகை கிட்டதட்ட பூஜ்ஜியமாகவே உள்ளது. ஐசிசி அமைப்பிடம் இருந்து வரும் நிதி ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தடைப்பட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட் அவ்வளவு தான். கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் சூப்பர் பவராக உருவெடுக்க வேண்டும் என்றால் உள்ளூரில் இருந்து நமக்கு அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது" என்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி
இங்கிலாந்து ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிகெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து அணி பின் வங்கியது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இந்த போக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை அழிவுப் பாதையில் தள்ளியுள்ளதாகப் பல முன்னாள் பாக். கிரிக்கெட் வீரர்கள் கடுமையாகச் சாடினர். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், வீரர் மற்றும் வீராங்கனைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்தாண்டு நிச்சயம் பாகிஸ்தானில் சென்று இங்கிலாந்து அணி விளையாடும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications