சர்வதேச அரசியலில்.. இந்தியாவிற்கு "மீண்டும்" சரிவு.. 800 மில்லியன் டாலரை வென்ற பாகிஸ்தான்.. எப்படி?
டெல்லி: பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்திருப்பது இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு அந்நாடு நிதியுதவி அளித்து வருவதாக இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் இது நடந்துள்ளது.
சர்வதேச அரசியலில் இந்தியாவிற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த உதவி, பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8,500 கோடி) நிதியுதவி பெற்ற ஒரு மாதத்துக்குப் பிறகு இப்போது பாகிஸ்தான் இந்த நிதியை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் பலமுறை IMF பிணை உதவி தொகையை பெற்றுள்ளது:
2001: 9/11 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு
2008: ஸ்டாண்ட்-பை ஏற்பாட்டின் கீழ் $7.6 பில்லியன்
2013: $6.6 பில்லியன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி
2019: $6 பில்லியன் கடன்
2023: $3 பில்லியன் குறுகிய கால ஏற்பாடு
பாகிஸ்தானுக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவி
இப்போது ஆசிய வளர்ச்சி வங்கி உதவியை பாகிஸ்தான் இந்தியாவின் எதிர்ப்பை சமாளித்து வென்றுள்ளது. பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், 300 மில்லியன் அமெரிக்க டாலர் கொள்கை அடிப்படையிலான கடனும், 500 மில்லியன் அமெரிக்க டாலர் திட்ட அடிப்படையிலான உத்தரவாதமும் அடங்கும்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் பயங்கரவாத திட்டங்களை அம்பலப்படுத்தவும், எதிர்கால கடன் திட்டங்களை நிறுத்தி வைக்கவும் இந்தியா பல உலகளாவிய கடன் வழங்கும் அமைப்புகளை அணுகியது. பாகிஸ்தானுக்கு எந்தவொரு நிதி உதவியும் வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்த்தது.
இந்தியாவின் எதிர்ப்பு
பாகிஸ்தானின் கழுத்தை பொருளாதார ரீதியாக நெருக்க இந்தியா முடிவு செய்துள்ளது. உலக வங்கியையும் , தீவிரவாதத்திற்கு உலக நாடுகள் பணம் தருகிறதா என்பதை கண்காணிக்கும் Financial Action Task Force அமைப்பையும் இந்தியா இதற்காக நாட உள்ளது.
இத்தனை காலம் Financial Action Task Force அமைப்பின் கிரே லிஸ்டில் பாகிஸ்தான் இருந்தது. அதாவது தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பணம் தருகிறது என்பதாக சந்தேகிக்கப்படும் லிஸ்டில் பாகிஸ்தான் இருந்தது. சமீபத்தில்தான் அந்த லிஸ்டில் இருந்தே பாகிஸ்தான் வெளியே வந்தது. மீண்டும் அந்த லிஸ்ட் உள்ளே பாகிஸ்தானை கொண்டு செல்ல இந்தியா காய் நகர்த்த உள்ளது.
அப்படி நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு முதலீடுகள் வராது. ஏற்றுமதி இறக்குமதி குறையும். அவர்களின் பொருளாதாரம் நாசம் அடையும். பாகிஸ்தான் ஜூன் 2018 இல் FATF 'கிரே லிஸ்டில்' சேர்க்கப்பட்டது. இருப்பினும், பயங்கரவாத நிதியுதவியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 2022 இல் அது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய நபர்களை சிறையில் அடைத்து சொத்துக்களைப் பறிமுதல் செய்ததாகவும் பாகிஸ்தான் கூறியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டை மீண்டும் அந்த லிஸ்டில் சேர்ப்பதற்கு தேவையான வேலைகளை செய்ய இந்தியா களமிறங்கி உள்ளது.
இந்தியாவின் வாதங்கள்
ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பிற சர்வதேச கடன் வழங்குபவர்களிடமிருந்து கிடைக்கும் கடன்கள் மேம்பாட்டுக்கு பதிலாக ராணுவ செலவுகளுக்கு திருப்பி விடப்படலாம் என்று இந்தியா அஞ்சுகிறது. பாகிஸ்தான் பலமுறை ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்ற பின்னரும் கூட, முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தவறிவிட்டது என்று இந்தியா நேற்று சுட்டிக்காட்டியது.
பாகிஸ்தானின் பலவீனமான நிர்வாகம் மற்றும் பொருளாதார விவகாரங்களில் அதன் ராணுவத்தின் அதீத பங்கையும் இந்தியா எடுத்துரைத்தது. மேலும், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பது குறித்தும் பேசியது ஐ.நா.வால் உறுதி செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுக்களின் சொத்துக்களை முடக்கவில்லை. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) முக்கிய உத்தரவுகளில் செயல்படத் தவறியது குறித்தும் இந்தியா கவலைகளை வெளிப்படுத்தியது.
ஆனால் இந்தியாவின் இந்த எதிர்ப்பை எல்லாம் மீறி பாகிஸ்தான் வெற்றிகரமாக இந்த நிதியை பெற்றுள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியாவிற்கு சாதகமான சூழல் நிலவாத நிலையில் இது இந்தியாவிற்கு இன்னொரு சரிவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications