"மாற்ற முடியுமா பாருங்க.." பரந்தூர் விமான நிலையம்.. மத்திய அரசிடம் திடீர் கோரிக்கை வைத்த தமிழக அரசு
டெல்லி: பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், இது குறித்து மத்திய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை ஒன்றை முன்வைத்து உள்ளது.
சென்னையில் இப்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
நீண்ட ஆய்வுக்குப் பின்னரே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அப்படி இங்கு இரண்டாவது விமான நிலையத்தை அமைத்தால் அது மாநிலம் வளர்ச்சியடைய உதவும்.

புதிய ஏர்போர்ட்
இருப்பினும், அப்பகுதியில் வாழும் மக்கள் விமான நிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விமான நிலையம் அமைந்தால் தங்களின் நிலங்கள் முற்றிலுமாக போய்விடும் என்பதால் அவர்கள் கவலை கொண்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இப்போது தான் அதைத் தற்காலிகமாகத் தள்ளி வைத்து உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

பரந்தூர் விமான நிலையம்
இந்தச் சூழலில் விமான நிலையம் குறித்து முக்கிய கோரிக்கையை மத்திய அரசிடம் தமிழக அரசு முன்வைத்து உள்ளது. அதாவது நிலம் கையகப்படுத்திய பிறகு, ஏகனாபுரம் கிராமம், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் அழிந்துவிடாமல் இருக்க, பரந்தூர் விமான நிலையத்தின் ஓடுபாதையை மாற்ற எதாவது வாய்ப்பு உள்ளதா எனத் தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது. அந்த கோரிக்கையை இப்போது மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தொழில்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறினார். ஒட்டுமொத்த விமான நிலையத்தை இல்லாமல் ஓடுபாதை இருக்கும் இடத்தை மட்டுமே மாற்றுவது குறித்த கோரிக்கையை தான் தமிழக அரசு வைத்துள்ளது.

பரீசிலனை
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சென்னையில் அமையும் விமான நிலையம் கிரீன்ஃபீல்ட் விமான நிலையமாக அமைய உள்ளது. சென்னையில் அமையும் இரண்டாவது விமான நிலையத்தில் பல்வேறு சாத்தியக்கூறுகளைப் பரிசீலித்து வருகிறோம். ஏனென்றால் ஒரே கிராமம் இருக்கும் இடத்தில் ஓடுபாதை இருக்கும் வகையில் இருந்தது. எனவே, ரன்வே இருக்கும் இடத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். இது குறித்து மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

வல்லுநர் குழு
தாம்பரம் விமானப்படைத் தளம் என பல்வேறு விவகாரங்களைக் கருத்தில் கொண்டே இதை நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். தொழில்நுட்ப ரீதியாக இந்த பிரச்சினை இருப்பதால் இதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும். மக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தி இங்கு விமான நிலையத்தை அமைக்க அரசு விரும்பவில்லை. வெள்ள காலத்தில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கவும் அதற்கான தீர்வுகளுக்காகவும் ஐஐடி மெட்ராஸ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது" என்றார்.

சாத்தியக்கூறு ஆய்வு
பரந்தூர் மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம் தமிழக தொழில் வளர்ச்சித் துறை மிக விரைவில் பரந்தூர் விமான நிலையத்தின் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தொழில்நுட்ப ஆலோசனை வழங்கவும் விரைவில் நிறுவனம் முடிவு செய்யப்படும். கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிறந்த வல்லுநர்களிடம் இருந்து ஆலோசனை பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.

எப்போது புதிய ஏர்போர்ட்
பரந்தூரில் வரும் 2028க்குள் புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ள நிலையில், அந்த இலக்கை நனவாக்க இந்த இரண்டாவது விமான நிலையம் முக்கியமானது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். புதிய விமான நிலையம் வந்தாலும் கூட மீனம்பாக்கம் விமான நிலையம் தொடர்ந்து செயல்படும் என்றும் புதிய விமான நிலையம் வருங்கால தேவையைப் பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏன் புதிய ஏர்போர்ட்
பரந்தூரில் புதிய விமான நிலையத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக தற்போதுள்ள விமான நிலையத்தையே விரிவாக்கம் செய்யலாமே எனச் சிலர் ஐடியா தருகிறார்கள்., ஆனால், அது இதை விட சிக்கலானது. ஏனென்றால், மீனம்பாக்கம் விமான நிலையத்தில், ஒரு பக்கம் குடியிருப்புகளும், மறுபுறம் பாதுகாப்பு நிலங்களும் உள்ளன. இதன் காரணமாகவே புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications