சூத்திரதாரி.. நாட்டையே அதிர வைத்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா போலீசில் சரண்.. பரபர!
டெல்லி: ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட லலித் மோகன் ஜா என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே வந்து டெல்லி போலீசாரிடம் சரண் அடைந்த நிலையில் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டுள்ளார்.
புதன்கிழமை அன்று, நாடாளுமன்ற லோக்சபாவில் அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ணப் புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்து ஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கீழே குதித்தவர்கள் தங்கள் ஷுக்களிலிருந்து மர்ம பொருள் ஒன்றை வெளியில் எடுத்து வீச, அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறி, அவைக்குள் பரவியது. இதனால், எம்.பிக்கள் பதறினர்.

அதிரவைத்த சம்பவம்: சில எம்.பிக்கள், அவர்கள் இருவரையும் பிடித்து தாக்கி, பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். உள்ளே இருந்த இந்த இருவருக்கும் ஆதரவாக நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே 2 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களும் வண்ணப் புகையை வெளியேற்றும் குப்பிகளையும் வைத்திருந்தனர். இதனால், நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி சிறப்பு போலீசார் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் பெங்களூர் விவேகானந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற மைசூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மனோ ரஞ்சன் ஆகியோரையும், வெளியே 2 பேர் கோஷமிட்ட ஹரியாணாவை சேர்ந்த நீலம் (42) என்ற பெண், அமோல் ஷிண்டே (25) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தி அவைக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.
கைதானவர்கள் சொன்ன தகவல்: தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஊபா சட்டம் உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் தேசிய புலனாய்வு அமைப்பின் வழக்குகளை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் அனுமதி கோரினர். இதையடுத்து, 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், 4 பேரும் ஒரே மாதிரியான பதிலை அளித்ததாகவும், தாங்கள் கைது செய்யப்பட்டால் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்து முன்னரே அவர்கள் தெளிவாக திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 4 பேரும் நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன், விஷால் ஷர்மா என்பவரின் வீட்டில் தங்கி இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில், குருகிராமில் இருந்த அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாஸ்டர் மைண்ட் லலித் ஜா: மேலும், முக்கிய குற்றவாளியாகவும், இந்த திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டவருமான லலித் ஜா தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 6 பேரும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்து, கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததாகவும், நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கவனத்தை ஈர்ப்பதற்கு நீண்ட காலமாக திட்டமிட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று நான்கு பேருடன் லலித் ஜா நாடாளுமன்றத்துக்கு வந்ததாகவும், நாடாளுமன்றத்துக்குள் செல்ல 2 பாஸ் மட்டுமே கிடைத்ததால் மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா மட்டும் உள்ளே சென்றதாகவும் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வண்ணப் புகைகளை உமிழும் குப்பிகள் மகாராஷ்ட்ராவின் கல்யாண் நகரில் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசில் சரண்: இவர்கள் அனைவரும் முதன்முதலில் மைசூரில் சந்தித்துள்ளனர். அப்போது முதலே இந்தத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் அவர்கள் ஆலோசித்துள்ளனர். அரசுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் எனும் நோக்கில் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரியான லலித் ஜாவை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அவரே டெல்லி போலீசில் சரண் அடைந்துள்ளார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியரான லலித் ஜா தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவரே சரண் அடைந்துள்ளார். போலீசார் அவரை முறைப்படி கைது செய்து காவல்துறை சிறப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
லலித் ஜா, நாடாளுமன்ற வாயில் அருகே ஆலம் ஷிண்டே மற்றும் நீலம் ஆகியோர் நடத்திய போராட்டத்தை மொபைல் போனில் படம் பிடித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்ததுடன், அதனை டிவியில் ஒளிபரப்பு செய்ய ஏதுவாக கொல்கத்தாவை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த தொண்டு நிறுவனத்தின் பொதுச்செயலாளர் ஆக லலித் ஜா உள்ளார்.
ராஜஸ்தானில் இருந்து டெல்லிக்கு: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்குப் பிறகு, 4 பேரின் மொபைல் போன்களை வாங்கிக் கொண்டு லலித் ஜா தப்பி உள்ளார். பேருந்தில் நீம்ரானா வழியாக ராஜஸ்தானின் நாகௌருக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு நண்பர்களுடன் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அவர், போலீசார் தன்னைத் தேடி வருவதால், பிரச்சனை தீவிரம் அடைந்துள்ளதை உணர்ந்து மீண்டும் டெல்லிக்குத் திரும்பியுள்ளார்.
லலித் ஜா சரணடைவதற்காக கர்தவ்யா பாத் டெல்லி காவல் நிலையத்திற்கு வந்தபோது அவருடன் மகேஷ் என்ற மற்றொரு நபரும் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, லலித் குமார் ஜா கொண்டு சென்ற செல்போன்கள் பற்றியும் விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications