வக்பு மசோதா.. 655 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கை.. ஒருநாளில் படிக்க முடியுமா? ஆ.ராசா குற்றச்சாட்டு!
டெல்லி: வக்ஃப் வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் செயல்பாடு கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். 655 பக்கங்கள் கொண்ட வக்ஃப் வாரிய வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள கூறியுள்ள ஆ.ராசா, அதனை ஒரே நாள் இரவில் படித்து நாளை கருத்து சொல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்த கூட்டத் தொடரில் வக்ஃப் வாரியம் தொடர்பாக இரு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் வக்ஃப் வாரியத்தின் பணிகளை சீரமைக்கும் என்று கூறப்பட்டன. இந்த மசோதாவில் வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினராக இடம்பெற செய்வது உள்ளிட்டவை சேர்க்கப்பட்டிருந்தன.

அதேபோல் வாரிய நிலங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டாய பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை முடிவு செய்ய நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளிப்பது உள்ளிட்ட மாற்றங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் காரணமாக தொடக்கம் முதலே வக்ஃப் வாரிய மசோதாவை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.
இதனைத் தொடர்ந்து மசோதாவை ஆய்வு செய்வதற்காக 31 பேர் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. அதில் பாஜக எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் 21 பேர் லோக்சபாவில் இருந்தும், 10 பேர் ராஜ்யசபாவில் இருந்தும் இடம்பெற்றனர். இந்த நிலையில் வக்ஃப் வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தின் முதல் நாளிலேயே ஆ.ராசா, கல்யாண் பானர்ஜி, கெளரவ் கொகோய் உள்ளிட்ட 10 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வக்ஃப் வாரிய மசோதா குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிவுள்ளது.
இதனால் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே திருத்தப்பட்ட வக்ஃப் வாரிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகின. தற்போது திமுக எம்பி ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், வக்ஃப் வாரிய மசோதா தொடர்பாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதில், வக்ஃப் வாரிய மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் செயல்பாடு கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுவின் வரைவு அறிக்கை மற்றும் அந்த மசோதா தொடர்பாக நாளை காலை 10 மணிக்கு விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். அந்த வரைவு அறிக்கை மட்டும் மொத்தமாக 655 பக்கங்களை கொண்ட ஒன்றாகும். அவை தற்போது தான் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்பின் எம்பி-க்கள் அனைவரும் அந்த வரைவு அறிக்கையை படித்து கருத்துகளை அளிக்கவுள்ளனர்.
அதேபோல் எதிர்ப்புகளையும் கூறவுள்ளனர். ஒரே நாள் இரவில் 655 பக்கங்களை படித்து தங்களின் கருத்தை கூறுவது முடியாத விஷயமாகும். மத்திய அரசு இவ்வாறு செய்வதன் மூலமாக நாடாளுமன்ற நிலைக்குழுவால் என்ன பயன் இருக்கிறது? என்று பதிவிட்டுள்ளார். ஆ.ராசாவின் இந்த பதிவு இஸ்லாமியர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications