பெகாசஸ்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ராகுல் காந்தி வரவேற்பு.. மத்திய அரசுக்கு முன் வைத்த "3 கேள்விகள்"
டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைத்தது வரவேற்கத்தக்கது என்றும், இந்த சாப்ட்வேர் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சரால் வாங்கப்பட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
Recommended Video
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் (pegasus snooping case ) இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.

வரவேற்பு
ராகுல் காந்தி தனது பேட்டியில் கூறியதாவது: பெகாசஸ் ஸ்பைவேர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ளதை வரவேற்கிறேன். பெகாசஸ் மென்பொருளை வாங்குவது 'இந்திய ஜனநாயகத்தின் ஆன்மா மீதான தாக்குதல்'. பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சரால்தான் இது வாங்கப்பட்டது.

நாட்டை விட உயர்ந்தவர்கள் கிடையாது
பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உளவு பார்த்தது சட்ட விரோதமானது. அப்படியிருந்தும் சட்ட விரோதமான செயலை செய்துள்ளார்கள். பிரதமர் இந்த நாட்டை விட உயர்ந்தவர் கிடையாது. யாருமே இந்த நாட்டை விடவும் இந்த அமைப்புகளை விடவும் உயர்ந்தவர்கள் கிடையாது.

நாடாளுமன்றம்
உளவு பற்றி, நாங்கள் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்த முயற்சிப்போம். இது குறித்து விவாதம் நடத்த பாஜக விரும்பாது என்று நான் நம்புகிறேன். ஆனாலும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம் பதில் தரப்படவில்லை. போராட்டம் நடத்தினோம் பதில் வரவில்லை. இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பலம் சேர்த்துள்ளது.

தேர்தல் ஆணையம் போன்கள்
முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவரங்கள் பிரதமரிடம் சென்றால் தேர்தல் நியாயமாக எப்படி நடந்திருக்க முடியும்.

3 கேள்விகள்
3 கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். பெகாசஸ் சாப்ட்வேர் பயன்படுத்த உரிமை பெற்றது யார், யாருக்கு எதிராகவெல்லாம் அது பயன்படுத்தப்பட்டது, இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் வேறு எந்த நாட்டிடமாவது இருக்கிறதா? இதுதான் எங்கள் 3 கேள்விகள்.

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி
பெகாசஸ் என்பது இந்திய ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சி. இந்த விவகாரத்தை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரிய நடவடிக்கை. இதில் உண்மை வெளிவரும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications