திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள்
டெல்லி: திராவிட முன்னேற்ற கழகத்தின் (திமுக) மீதான மக்களின் கோபம் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாகி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சனாதன விவகாரத்தில் திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலில் கூறினார்.
17வது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையொட்டி 18வது லோக்சபா உறுப்பினர்களை தேர்வு செய்யும் நாடாளுமன்ற தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு இன்னும் 4 நாளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. பிரதமர் மோடி ஏழு முறைக்கு மேல் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்,
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், "தமிழகத்தில் திமுக மீதான மக்களின் கோபம் பாஜகவுக்கு சாதமாக மாறி வருகிறது. திமுக மீதான மக்கள் கோபம் தான் எங்களது வெற்றி. சனாதன விவகாரத்தில் திமுக மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
ராமர் கோயிலை அரசியல் ஆதாயமாக எதிர்க்கட்சியினர் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இப்போது அங்கு பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த பிரச்னை அவர்களின் கையை விட்டுப் போய்விட்டது. தற்போது ராமர் கோயில் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முடியாது" இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தேர்தல் பத்திரங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், "தேர்தல் பத்திரங்கள் மூலம் உங்களுக்கு பணம் கிடைத்துள்ளது. எந்த நிறுவனம் கொடுத்தது? எப்படி கொடுத்தார்கள்? எங்கே கொடுத்தார்கள்? என்பதை அறிய முடிகிறது.. அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கு சொல்கிறேன்.. இனியாவது நேர்மையாக சிந்திக்க வேண்டும.. அவர்கள் அனைவரும் வருந்துவார்கள் (தேர்தல் பத்திரங்களை ரத்து செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக)" என்றார்.
இந்தியாவில் டெஸ்லா கார்கள், ஸ்டார்லிங்கை பார்க்க முடியுமா என்று கேள்விக்கு பதில் அளித்த, பிரதமர் மோடி, "எலான் மஸ்க் மோடியின் ஆதரவாளர் என்பார்கள்.. ஆனால் அடிப்படையில் அவர் இந்தியாவின் ஆதரவாளர்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications