ஜல்லிக்கட்டு வழக்கில் வெற்றி! தமிழ்நாடு அரசின் அந்த வாதம்! பீட்டாவை வீழ்த்தியது எப்படி? பரபர பின்னணி
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான சட்டத்துக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்டவை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.
ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்து இருந்தன . உச்ச நீதிமன்றத்தில் இந்த போட்டிக்கு எதிராக இவர்கள் தொடுத்த வழக்கு அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்த வழக்கில் பல சுவாரசிய வாதங்கள் வைக்கப்பட்டன. அதேபோல் வழக்கில் தமிழ்நாடு அரசும் அதிரடியான சில பாயிண்டுகளை வைத்தன. அதில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தீர்ப்பு என்ன?
ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மாநில அரசு ஒன்று இது கலாச்சாரம் என்று சட்டம் இயற்றி உள்ளது.
நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. அதனால் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
வாதம் என்ன?
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்வியில், 100 மீட்டர் தூரத்தில் காளைகள் எப்படி ஓடி வெளியேறுகின்றன இதனால் காளைகளுக்கு காயம் ஏற்படாதா? அங்கே ஏன் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இது வெறும் கேளிக்கை விளையாட்டு தானே.. இதில் காளைகளின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பாக வாதம் வைத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில மரணங்கள் நடந்து இருக்கிறது உண்மைதான். ஆனால் இதை தடுக்கத்தான் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்தில் விதிகள் உள்ளன.
இந்த விதிகள் காரணமாக மரணங்கள் தடுக்கப்படுகின்றன. இது வெறும் ஜாலிக்காக ஆடும் விளையாட்டு அல்ல. ஜல்லிக்கட்டு என்பது வெறும் கேளிக்கை அல்ல. காளைகளை அவர்கள் இதற்காக இத்தனை வருடம் பழக்கப்படுத்தவில்லை. இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகளின் அங்கீகாரம் அதிகரிக்கும். அதன் மதிப்பு அதிகரிக்கும். காளைகளின் விலையும் மார்க்கெட்டில் அதிகரிக்கும்.
நாட்டு காளைகளை காக்க இது உதவும், என்று வாதம் வைத்தார். இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி கே எம் ஜோசப், நீங்கள் சொல்வது எல்லாம் இருக்கட்டும். ஆனால் காளைகள் மரியாதையோடு வாழ வேண்டுமே .. அதற்கு மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பயத்தை நாம் ஏற்படுத்த கூடாதே.

நீங்கள் ஒரு விலங்கை பொம்மை போல பயன்படுத்த கூடாதே என்று கேள்வி எழுப்பினார். இதில் பதில் அளித்த கபில் சிபல், காளைகளுக்கு வலி, வேதனை இல்லை. இருக்கிறது என்றே வைத்துக்கொள்ளுவோம். மற்ற விலங்குகளை வைத்து போட்டிகள் நடப்பது இல்லையா? பல விலங்குகளை வைத்து வேலைகளை செய்கிறார்களே? அது தவறு இல்லையா?
ஜல்லிக்கட்டு என்பது கேளிக்கை கிடையாது. இதில் காளைகளின் வீரத்தை காட்டுகிறார்கள். காளைகள் ஏன் முக்கியம் என்பதை காட்டுகிறது. குதிரைகளை மட்டும் போட்டிகளில் பயன்படுத்துகிறார்களே? அதில் என்ன தவறு இருக்கிறது. குதிரைகளை பயன்படுத்துவதை இவர்கள் ஏன் எதிர்ப்பது இல்லை? காளைகளுக்கு சாராயம் ஊற்றப்படுகிறது கண்களில் மிளகாய் பொடி தூவுகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். காளைகள் இவர்களின் குடும்பத்தில் பிள்ளைகள் போல. பெற்ற பிள்ளைகளை யாரவது இப்படி நடத்துவார்களா?
இந்த ஜல்லிக்கட்டு காரணமாகவே நாட்டு காளைகள் உயிர் வாழ்கின்றன. அந்த காளைகளுக்கு நோய்கள் வரலாம்.
ஆனால் ஜல்லிக்கட்டு காரணமாக காளைகளை இவர்கள் சிறப்பாக பாதுகாக்கிறார்கள். இல்லையென்றால் வெளிநாட்டு காளைகள் அந்த இடத்தை பிடித்துவிடும். ஜல்லிக்கட்டுதான் நாட்டு காளைகளை பாதுகாக்கிறது. சர்க்கஸ் போல ஜல்லிக்கட்டு ஒன்றும் கேளிக்கை கிடையாது, என்று கூறினார்.
இதற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி ஜோசப், ஜல்லிக்கட்டு மூலமாக நாட்டு காலிகள் பாதுகாக்கப்படுகிறது என்று எப்படி சொல்கிறீர்களா என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த கபில் சிபல், ஜல்லிக்கட்டுக்கு பின்பாகவே காளைகளை, மாடுகளுடன் இணைய வைப்பார்கள்.
இனப்பெருக்கம் செய்ய வைப்பர்.ஜல்லிக்கட்டு நடக்காத சமயத்தில் இந்த இனப்பெருக்கம் நடக்காது. இந்திய காளைகளை, பாரம்பரிய இந்திய காளைகளை காக்க வேண்டும் என்றால் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதில் என்ன தவறு இருக்க முடியும், என்று பதில் அளித்தார்.
இதில் பீட்டா வைத்த வாதத்தில், தமிழ்நாட்டில் பாரம்பரிய காளைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்று சொல்ல முடியாது. ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு கிடையாது. இதைத்தான் முன்பு உச்ச நீதிமன்ற அமர்வு சொன்னது.
ஆனால் தமிழ்நாடு அரசு அதற்கு எதிராக சட்டம் இயற்றி உள்ளது. மனிதர்கள் மகிழ்விற்காக மிருகத்தை கோபப்படுத்தி அதை தாக்குகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது விலங்குகளுக்கு எதிரான கொடுமை. இதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எங்களிடம் உள்ளன என்று பீட்டா கூறியது. இதையடுத்து குத்துச்சண்டையில் கூடத்தான் மனிதர்கள் காயம் அடைகிறார்கள் அதை நிறுத்துவிடலாமா? நீங்கள் கொடுக்கும் வீடியோ ஆதாரங்களை ஏற்க முடியாது
சிசிடிவி ஆதாரங்கள் இருக்கிறதா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பீட்டா அமைப்பு சிசிடிவி ஆதாரங்கள் இல்லை. அதே சமயம், குத்துச்சண்டையை நிறுத்துவீர்கள் என்றால் இந்த மனுவையே நாங்கள் வாபஸ் வாங்குகிறோம்.

ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து ஜல்லிக்கட்டு என்ற பெயரில் அடக்க பார்க்கிறார்கள். இதில் மாடுகள் கடுமையாக காயம் அடைகிறது என்று பீட்டா வாதம் வைத்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வைத்த வாதத்தில், நாம் சுதந்திரமான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால் அதே சமயம் விலங்குகளை சார்ந்துதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். விலங்குகளை பல வகைகளில் நாம் பயன்படுத்துகிறோம். விலங்குகளை நாம் உணவாகவும் சாப்பிடுகிறோம். காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் என்று இரண்டு வகை உள்ளன. நாம் இப்போது வீட்டு விலங்குகள் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்.
ஒரு விலங்கை வீட்டு விலங்காக மாற்றுவது என்பது எளிதான காரியம். அது விலங்குகளுக்கு கடுமையான கஷ்டத்தை ஏற்படுத்த கூடியது. ஆனாலும் விலங்குகளை நாம் நமது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறோமே. வீட்டு விலங்குகள் இருக்கிறதே. நாம் விலங்குகளை உண்கிறோமே. அது தவறு இல்லையா? உண்பதற்காகவே கூண்டுகளில் விலங்குகள் வளர்க்கப்படுகிறதே.
அதை ஏன் இவர்கள் தடுக்கவில்லை. இதில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த விலங்குகளை வைத்து இருக்கும் தனி நபர்களின் உரிமைகளை பற்றி நாம் பேசுவது இல்லையே. ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் என்பதே, கொடுமைகள் எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்றுதான் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
விலங்குகளுக்கு வலிக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் குதிரை வைத்து வண்டி ஓட்டுகிறார்கள், பந்தயம் நடத்துகிறார்கள், பொதி சுமக்க வைக்கிறார்கள். இது எல்லாம் தவறு கிடையாதா? இதை எல்லாம் இவர்கள் கேள்வி எழுப்ப மாட்டார்களா? என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி கேஎம் ஜோசப், விலங்குகளுக்கு இருக்கும் வலி என்றால் என்ன? விலங்குகளுக்கு உண்மையில் வலி இருக்கிறதா? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்ன ஆதாரம் உள்ளது? இதில் இன்னும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறதே என்று கூறினார்.
இதையடுத்து பேசிய தமிழ்நாடு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், இங்கே விலங்குகளின் உரிமைகள் பற்றி இவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை? இது எப்படி உரிமைகள் தொடர்பானதாக இருக்கும். அனைத்தையும் உரிமைகளோடு தொடர்புபடுத்தி முடியாது.
விலங்குகளுக்கு தேவையில்லாத வலியை ஏற்படுத்த கூடாது என்பது சரிதான். ஆனால் இங்கே தேவையில்லாத வலியை ஏற்படுத்துவது இல்லையே?, என்று கூறினார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி ராய், நிறைய பேர் ஒரே நேரத்தில் மாடுகள் மீது தாவினால் என்ன நடக்கும்?
இதற்கு பதில் அளித்த, தமிழ்நாடு அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த விளையாட்டு முறை எப்படி இருக்கிறது என்று நீங்கள் பார்க்க வேண்டும். எங்களிடமும் வீடியோ ஆதாரம் இருக்கிறது. நாங்கள் வீடியோவை காட்டுகிறோம், என்று கூறினார்.
இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி ராய்.. ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வந்த பின், எங்களையும் நீங்கள் ஜல்லிக்கட்டு பார்க்க அழைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த கபில் சிபல்.. கண்டிப்பாக உங்களை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அழைப்போம் என்று கபில் சிபல் வாதம் வைத்தார்.
இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதி ஜோசப், பல போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் காளை மீது தாவினால் என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கபில் சிபல், ஒரு நேரத்தில் ஒரு மாடு மீது ஒருவர்தான் தாவ வேண்டும் என்ற விதி உள்ளது., என்றார்.
இதையடுத்து, காளைகளை வீரர்கள் துன்புறுத்துகிறார்கள். விலங்குகள் கொல்லப்படுகின்றன. கொடுமைகள் நடக்கின்றன. சட்டப்படி இது தவறு. ஆனால் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டு வந்து உள்ளது. இந்த சிறப்பு சட்டத்தை நீக்க வேண்டும். எனவே உடனடியாக ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்க வேண்டும். ஜனவரி மாதம் போட்டி நடப்பதால் வழக்கில் தாமதம் இன்றி விசாரணை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு கோரிக்கை வைத்தது.
பின்னர் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்பே ஜல்லிக்கட்டு கொண்டு வந்தோம். ஜல்லிக்கட்டு சட்டப்படிதான் நடக்கிறது. காளைகள் துன்புறுத்தப்படவில்லை. இந்த கலாச்சார ரீதியான விளையாட்டு. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் போது மாடுகள் அதிகம் மதிக்கப்படும். அப்படி இருக்கும் போது காளைகளை துன்புறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. அப்படி இருக்கும் போது இந்த விளையாட்டிற்கு தடை விதிக்க கூடாது.
இது கலாச்சாரத்துடன் ஒன்றிய விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு தடை விதித்தால் கலாச்சாரமும் பறிபோகும். தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் பறிபோகும். பல ஆண்டுகளாக நடக்கும் இந்த விளையாட்டு தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும். விலங்கு வதை என்ற பெயரில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முழுமையான தடை விதிக்கக்கூடாது. விலங்கு வதை நடைபெறவில்லை. முழு பாதுகாப்போடுதான் போட்டி நடக்கிறது.
அனைத்தையும் ஆய்வு செய்த பின்னரே இந்த அனுமதியை வழங்கி இருக்கிறோம் என்று தமிழ்நாடு அரசு தனது வாதத்தில் தெரிவித்து உள்ளது. முன்னதாக இந்த வழக்கில் மதுரை தொகுதியின் எம்.பி சு.வெங்கடேசன் எம்.பி தன்னையும் மனுதாரராக இடையீட்டு மனு மூலம் சேர்த்துக்கொண்டார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்தரநாத் எம்.பி ஆகியோரும் மனுதாரர்களாக இணைந்தனர். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் இதில் மனுதாரராக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications