வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிரான மனுக்கள்.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதாவுக்கு எதிராக திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
முஸ்லிம் மன்னர்களாலும், செல்வந்தர்களும் கடவுளுக்கு தானமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட கோடிக்கணக்கிலான சொத்துகளே வக்பு சொத்துகளாகும். இந்த சொத்துகள் மூலம் வரும் வருவாயைக் கொண்டு முஸ்லிம் மக்களின் கல்வி, மசூதி பராமரிப்பு ஆகிய நற்பணிகளுக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சொத்துகளை முறைப்படுத்துவதற்காக வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 1995 ஆம் ஆண்டு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த சட்டமே அமலில் உள்ளது. இந்நிலையில், வக்பு சொத்துகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக மோடி தலைமையிலான அரசு வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்து கடந்த ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு அதில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டதையடுத்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, வக்பு சட்ட மசோதாவை மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரிண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அதிகம் பேர் ஆதரவளித்ததால் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு சட்ட மசோதா நிறைவேறியது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளனன.
திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்யவுள்ளது.












Click it and Unblock the Notifications