பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ரூ.2 உயர்த்திய மத்திய அரசு! வாகன ஓட்டிகளுக்கு எதிர்பார்க்காத அதிர்ச்சி
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ 2 உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்த்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச விலையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வந்தன. இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை 4.5 சதவீதம் சரிந்து ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கும் பிரென்ட் கச்சா எண்ணெய் 4.39 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 62.7 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த விலை குறைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்து விலைவாசி கட்டுக்குள் இருக்கும் என மக்கள் நம்பினர்.
மத்திய அரசு
ஆனால் தற்போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ரூ 2 உயர்த்தி உத்தரவிட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே செலுத்த வேண்டும் என்றும் இதை வாடிக்கையாளர்களின் தலைமேல் சுமத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல்
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூ 13 ஆகவும் டீசலுக்கு ரூ 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரி என்பது இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் சில பொருட்களுக்கு மத்திய அரசு விதிக்கிறது. இது உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாகும்.
உற்பத்தியாளர்கள்
இந்த வரியை உற்பத்தியாளர்களே செலுத்திவிட்டு, அதை அந்த பொருளின் விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துக் கொள்வார்கள்.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பதால் அது நேரடியாக மக்களுக்குச் செல்வதை தடுத்துவிட்டு அந்த லாபத்தை கலால் வரி என்ற பெயரில் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என சொல்லப்படுகிறது.
கலால் வரி
ஒரு வேளை கச்சா எண்ணெயின் விலை உயருமானால் இந்த கலால் வரி உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் எண்ணெய் நிறுவனங்கள் அவற்றை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிடக் கூடும் என சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை 2024 ம் ஆண்டு மத்திய அரசு நீக்கியது. அதாவது விண்ட் ஃபால் டேக்ஸ் என்பது ஒரு சில குறிப்பிட்ட தொழில்கள், பொருளாதார நிலைமைகளால் இயல்பான வர்த்தக நடைமுறையை தாண்டி அதிக லாபம் ஈட்டும் போது அரசாங்கம் விதிக்கும் வரியாகும்.
2017 ஆம் ஆண்டு
கடைசியாக 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் கலால் வரி 2 ரூபாயும் அதன் பிறகு ரூ.1.50 பைசாவு குறைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் ரூ 2 உயர்த்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி 2 ரூபாயும் டீசலுக்கு ரூ 5 ம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.80-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications