பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14, டீசல் ரூ.18 இழப்பில் விற்பனை.. ரூ.80 ஆயிரம் கோடி நஷ்டம் என தகவல்
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 120 டாலராக உயர்ந்த நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 14 ரூபாயும், டீசலுக்கு 18 ரூபாயும் இழப்பு ஏற்படும் வகையில் விற்பனை செய்து வருகின்றன. இதனால் நடப்பு நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படக்கூடும் என ஐக்ரா நிறுவனம் கணித்துள்ளது.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காட்டிலும் சில்லறை எரிபொருள் விலைகள் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கின்றன.

உள்நாட்டில் எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலை முறையே ரூ.14, ரூ.18 இழப்பில் விற்கின்றன. இதனால் நடப்பு நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் ரூ.80 ஆயிரம் கோடி நஷ்டத்துக்கு உள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உர மானியம் ரூ.2.25 லட்சம் கோடி வரை உயரக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1.71 லட்சம் கோடியை விட அதிகம் ஆகும்.
பிரபல நிதி மதிப்பீட்டு நிறுவனமான ஐக்ராவின் துணைத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் கூறுகையில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், சில்லறை விலையை உயர்த்தாததால் இந்த நஷ்டம் ஏற்படுவதாக கூறியுள்ளார். சல்பர், அமோனியா மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளதால், ஏப்ரல் 2026-இல் யூரியா விலையும் அதிகரித்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, எரிசக்தி மற்றும் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பது பல துறைகளின் லாபத்தைக் குறைத்து, நிறுவனங்களின் கடன் நிலையைப் பலவீனப்படுத்தும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. அதேநேரம் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஏற்று அரசு மானியம் விடுவிக்கும் அல்லது விரைவில் விலையேற்றிக் கொள்ள அனுமதிஅளிக்கும் என கூறப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
முன்னதாக தேர்தல் முடிந்த கையோடு மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்தும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. அதேநேரம் மே 1ம் தேதி அன்று கச்சா எண்ணெய் விலைப்படி சிலிண்டர் விலை மாறும். அந்த வகையில் இந்த மாதம் வணிக சிலிண்டர் மற்றும் வீட்டு சிலிண்டர் கணிசமாக உயரலாம் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்த்தப்படும் என்றும் மக்கள் அஞ்சுகிறார்கள்.
சென்னையில் இன்று (30.04.2026 -வியாழக்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications