டிரம்பின் புதிய வரியால் எல்லாம் போச்சு.. இந்தியாவுக்கு தான் பெரிய சிக்கல்! ஒரே நாளில் தாறுமாறாக சரியுது
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடியாக இன்று காலை ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். மருத்துவப் பொருட்களின் இறக்குமதிக்கு 100% வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்திய மருத்துவ நிறுவனங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே பங்குச்சந்தையில் மருத்துவப் பொருட்களின் பங்குகள் மிகக் கடுமையாகச் சரிந்துள்ளன. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக வரிகளை விதித்து வருவது அனைவருக்கும் தெரியும். ஆனால், டிரம்ப் தரப்பு மருந்து சார்ந்த இறக்குமதிக்கு வரி விதிக்காமல் இருந்தார். இந்தச் சூழலில் இன்று காலை தடாலடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். புதிய வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

100% வரி
மருந்துப் பொருட்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். அதேபோல சமையலறை, கழிவறை உபகரணங்களுக்கு 50%, பர்னிச்சருக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார். அதாவது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்துகளை இறக்குமதி செய்யும்போது அதற்கு 100% வரி செலுத்த வேண்டி இருக்கும். இதில் மருத்துவப் பொருட்கள் மீதான டிரம்ப் வரி ரொம்பவே முக்கியமானது. இது இந்திய நிறுவனங்களையும் பாதிக்கலாம்.
கடும் சரிவு
இந்த வரி அறிவிப்பு வந்தவுடனே இந்தியப் பங்குச்சந்தைகளில் மருந்து நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாகச் சரிந்தது. காலை 12 மணியளவில், நிஃப்டி பார்மா குறியீடு 2.12%, அதாவது 460 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்களான நாட்கோ பார்மா, க்ளாண்ட் பார்மா, மற்றும் சன் பார்மா ஆகியவை 4% வரை சரிந்து. பங்குச்சந்தையைப் பார்த்தாலே பார்மா நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்துள்ளது தெரிகிறது.
கவனிக்க வேண்டியது
அதேநேரம் டிரம்ப் உத்தரவில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். டிரம்ப் வரியில் ஜெனரிக் மருந்துப் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நமது பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஜெனரிக் மருந்துகளையே அதிகம் ஏற்றுமதி செய்யும் நிலையில், அதற்கு வரி இருக்காது. ஆனாலும், வரும் காலங்களில் டிரம்ப் ஜெனரிக் மருந்துகளுக்கும் வரி விதிக்கலாம் என்ற அச்சத்தாலேயே இந்த நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளன.
உண்மையில் பாதிப்பு இருக்குமா?
டாக்டர் ரெட்டிஸ், சன் பார்மா, லூபின், அரவிந்தோ போன்ற நிறுவனங்கள் ஜெனரிக் மருந்துகள் மூலம் அமெரிக்கச் சந்தையில் நீண்டகாலமாகப் பயனடைந்து வருகின்றன. அமெரிக்க ஜெனரிக் மருந்துகளில் 45% இந்திய நிறுவனங்களே உள்ளன. ஆனாலும், இந்த ஜெனரிக் மருந்துகளின் லாபம் மிகக் குறைவாகவே கிடைக்கும். இதனால் வரி விதிக்கப்பட்டால் இந்த நிறுவனங்கள் அமெரிக்கா மார்கெட்டை விட்டே வெளியேறலாம். அப்போது அமெரிக்கா முழுவதும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்படலாம். இதனால் ஜெனரிக் மருந்துகளுக்கு வரி விதிக்கப்பட்ட வாய்ப்புகள் குறைவு!
அதேநேரம் சன் பார்மா உள்ளிட்ட சில நிறுவனங்கள் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளை அமெரிக்காவில் விற்கிறது. இருப்பினும், அவை நேரடியாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாகவே அவை விற்கப்படுகிறது. எனவே, அவர்களும் கூட வரி பாதிப்பில் இருந்து தப்பிவிடுவார்கள். இருப்பினும், டிரம்ப் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது என்பதாலேயே இந்திய முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications