"தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினாலும்" அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. உடைத்து பேசிய பியூஷ் கோயல்
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை நீண்ட காலமாக இழுபறியில் இருக்கிறது. இதற்கிடையே வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்தியத் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். தேசிய நலன்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் யார் அழுத்தம் கொடுத்தாலும் இந்தியா அவசரம் காட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் எல்லா நாடுகள் மீதும் வரி விதித்தார். உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட வேண்டும் என்றும் இல்லையென்றால் அதிக வரி விதிப்பேன் என டிரம்ப் கூறி வந்தார். அப்படித் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்டது. இதற்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதும் ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டது.

இந்தியா அமெரிக்கா
இந்தியா அமெரிக்கா இடையே நீண்ட காலமாக வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்த போதிலும், அது இறுதியாகவில்லை. சில விஷயங்களில் அமெரிக்கா கேட்பதை இந்தியா ஏற்கத் தயாராக இல்லை எனச் சொல்லப்பட்டது. அமெரிக்காவின் வரிக்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மத்தியத் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
பியூஷ் கோயல்
யார் அழுத்தம் கொடுத்தாலும், நிர்ப்பந்தம் செய்தாலும் இந்தியா அவசரப்பட்டு எந்தவொரு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது என்று பியூஷ் கோயல் கூறினார். ஜெர்மனியில் நடைபெற்ற பெர்லின் உரையாடல் நிகழ்வில் பேசிய பியூஷ் கோயல், இந்தியாவின் நீண்டகால நலன்களுடன் ஒத்துப்போகும் வர்த்தக ஒப்பந்தங்களை மட்டுமே இந்தியா போடும் என்பதைத் தெளிவுபடுத்தினார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேபோல அமெரிக்கா உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
ஆனால், நாங்கள் அவசர அவசரமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தின் பெயரிலோ வர்த்தக ஒப்பந்தத்தைப் போட மாட்டோம். எங்கள் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டி எல்லாம் வர்த்தக ஒப்பந்தத்தைப் போட முடியாது.. வர்த்தகத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
நீண்ட கால பலன்
இந்தியா ஒத்துழைப்பிற்குத் தயாராக இருந்தாலும்.. சீக்கிரம் ஒப்பந்தம் போட வேண்டும் என்பதற்காகத் தேசிய முன்னுரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது.. இந்தியா அவசரத்திலோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ முடிவுகளை எடுப்பதில்லை.. வர்த்தக ஒப்பந்தங்களில் எப்போதும் குறுகிய காலப் பலன்களை மட்டும் பார்க்கக்கூடாது. இவை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும். அதேபோல மறுபுறம் அதிக வரிகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், நியாயமான வர்த்தக விதிமுறைகளை உறுதி செய்வதற்கும் இந்தியா புதிய சந்தைகளை ஆராய்ந்து வருகிறது" என்றார்.
சரியான முடிவை எடுப்போம்
இந்தியாவுக்கு நியாயமான மற்றும் நிலையான வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்கிறதா என்ற கேள்விக்கு அவர், "வெளியில் இருந்து எவ்வளவு அழுத்தம் வந்தாலும் இந்தியா தனது தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தேசிய நலன்களைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் கருத்தில் கொள்ள மாட்டோம். பரஸ்பர மரியாதை அடிப்படையிலேயே இரு நாட்டு உறவு உருவாகும்.. யாருடன் வர்த்தகம் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று யார் சொன்னாலும் அதை ஏற்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications