ஹாட்ரிக்.. மீண்டும் பிரதமராகும் முன் காந்தி, வாஜ்பாய் நினைவிடத்துக்கு சென்ற மோடி.. மலர்தூவி மரியாதை
டெல்லி: ஹாட்ரிக் முறையில் தொடர்ந்து 3வது முறையாக இன்று மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதையொட்டி அவர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவிடங்களுக்கு சென்று கைக்கூப்பி வணங்கி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிக்க 272 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும்.

இல்லாவிட்டால் கூட்டணி கட்சிகள் உதவியுடன் 272 எம்பிக்களை சேர்த்து மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். அந்த வகையில் தற்போது எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி என்பது கிடைக்கவில்லை.
பாஜக 240 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. கூட்டணி கட்சிகளான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் ஜேடிஎஸ் உள்பட பிற கட்சிகளுக்கு 52 எம்பிக்கள் உள்ளனர். அந்த கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் உதவியுடன் இன்று மீண்டும் மத்தியில் பாஜக தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
இந்நிலையில் தான் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். கடந்த 2014, 2019 ஆண்டுகளில் அவர் பிரதமராக பதவியேற்று தொடர்ந்து 10 ஆண்டு பணியை நிறைவு செய்தார். இன்று அவர் 3வது முறையாக தொடர்ந்து பிரதமராக பதவியேற்று மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சாதனையை சமன் செய்ய உள்ளார். இன்று இரவு 7.15 மணிக்கு மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி திரெளபதி முர்மு நரேந்திர மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிலையில் தான் பதவியேற்புக்கு முன்பாக இன்று காலையில் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று கைக்கூப்பி வணங்கினார். அதன்பிறகு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்துக்கு சென்ற மோடி கைக்கூப்பி வணங்கி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் தலைவர்களின் நினைவிடங்களை அவர் சுற்றி வந்து வணங்கினார். மேலும் டெல்லியில் உள்ள போர் நினைவகத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி தலைவர்களின் நினைவிடங்கள் மற்றும் போர் நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications