"சங்கிலியுடன் நாடு கடத்தப்படும் இந்தியர்கள்".. டிரம்பிடம் வாயையே திறக்காத மோடி.. விளாசும் காங்கிரஸ்
டெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் கை, கால்களில் விலங்கு மாட்டி அழைத்து வரப்படுவதால் நாடு கொந்தளித்துள்ளது பற்றி பிரதமர் மோடி தனது நல்ல நண்பரிடம் (டொனால்ட் டிரம்ப்) எதுவும் பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் சாடி உள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று உள்ளார். பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி தற்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

இதில் இந்தியர்களும் அடங்குவர். கடந்த 5ம் தேதி முதற்கட்டமாக அமெரிக்க போர் விமானத்தில் 104 இந்தியர்கள் அமிர்தசரஸில் வந்து இறங்கினர். அதன்பிறகு நேற்று 114 இந்தியர்கள் 2வது கட்டமாக அமெரிக்க போர் விமானத்தில் அமிர்தசரஸ் வந்தனர்.
இவர்கள் ராணுவ விமானத்தில் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியர்களை அமெரிக்கா அவமதிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். மேலும் கை, கால்களில் விலங்கு இன்றி இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து கை, கால்களில் சங்கிலி மாட்டி இந்தியர்கள் அழைத்து வரப்படுவது தொடர்பாக மீண்டும் காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக சாடி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியும்,கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொது செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இவர்களின் கை, கால்களில் விலங்கு மாட்டப்பட்டு வருகிறது. இதனால் நாடு கொந்தளித்துள்ளது. இந்த நடவடிக்கை பற்றி பிரதமர் மோடி தனது நல்ல நண்பரிடம் (டொனால்ட் டிரம்ப்) எதுவும் கூறவில்லை என்பது தெளிவாகி உள்ளது.
அமெரிக்காவின் போர் விமானம் நேற்று இரவில் 116 இந்தியர்களுடன் அமிர்தசரஸில் தரையிறங்கியது. அதில் வந்து இறங்கியவர்கள் விலங்கு மாட்டப்பட்டது பற்றி தெரிவித்துள்ளனர். அதேபோல் சீக்கிய இளைஞர் ஒருவர் டர்பன் இன்றி அழைத்து வரப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 5ம் தேதி முதற்கட்டமாக 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இந்த விமானமும் அமிர்தரசஸில் தான் இறங்கியது. இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.நம் நாட்டின் புனித நகராக உள்ள அமிர்தசரஸை நாடு கடத்தும் மையமாக மாற்ற வேண்டாம் '' என்று சாடி உள்ளார்.
அதாவது பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்பை சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில் இருநாடுகள் இடையேயான வர்த்தகம், உறவு பற்றி பேசப்பட்டது. ஆனால் நாடு கடத்தும் விவகாரம் பற்றி மோடி எதுவும் பேசவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
அதோடு மோடி அமெரிக்கா பயணத்தை முடித்து நாடு திரும்பியும் கூட கை, கால்களில் சங்கிலி போடப்பட்டு தான் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதற்கு நேற்று அமெரிக்காவில் இருந்து 114 இந்தியர்களுடன் வந்த ராணுவ விமானமே சான்று. இப்படியான சூழலில் தான் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications