மாஸ்டர் பிளான்.. வருகிறது "கதி சக்தி".. ஏழைகள் நலன் காக்கும் செம அறிவிப்பாக மாறுமா?
மோடியின் கதி சக்தி திட்டத்தை அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: தொடர் வளர்ச்சிக்கு உதவ 7 அம்சங்களில் பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டம் அமல்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
கதி சக்தி திட்டம் என்றால் என்ன?
கதி சக்தி, அதாவது அதிவிரைவு சக்தி என்று பொருள்.. கடந்த வருடம் ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாற்றும்போது, கதி சக்தி என்ற திட்டத்தை பற்றியும் பேசினார்... அப்போதுதான் அந்த திட்டம் என்றால், அதன் பயன்பாடுகள் குறித்த தகவல்கள் தெரிய ஆரம்பித்தன..

வளர்ச்சி
பொதுவாக, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்பட்டு வரும் நிலையில், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் திட்டங்களே இங்கு அவசியமாகின்றன.. நாடு முழுவதும் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் பிரதமரின் இந்த கதி சக்தி திட்டம் என்று சொல்லப்பட்டது.

இந்தியா
அதாவது, அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்றடையாமல் இருந்த நிலை இப்போது இல்லை... நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக உள்ள தடைகளை தாண்டி செல்லும் வகையில் மிகப்பெரிய திட்டத்தை உருவாக்க மத்திய அரசு யோசித்தது.. அதனால்தான், தொழில்துறையில் நம் இந்தியா, உலக அளவில் போட்டியிட உதவும் வகையில் "கதி சக்தி" என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தை கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த வருடமே சொல்லப்பட்டது.. நாட்டின் வளர்ச்சியை வேகமடையச் செய்வதே இந்த "கதி சக்தி" திட்டமாகும்..

நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்த கதிசக்தி திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. நிதியமைச்சர் பேசும்போது, "அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சிப்பாதையை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.. இளைஞர்கள் தொழில் தொடங்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.. போக்குவரத்து வசதிகள் உள் கட்டமைப்பு வசதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது..

கதி சக்தி
கதி சக்தி திட்டத்தின் மூலம் நாட்டின் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்... இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கப்படும்... விநியோகத்துக்கான நேரம் குறைவதுடன், சரக்குகளை கையாள்வதற்கான செலவும் குறையும். தரமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வளர்ச்சி என்பது சாத்தியமில்லை... இப்போது அதை முழுமையான முறையில் உருவாக்க அரசு தீர்மானித்துள்ளது. அதற்காகவே கதி சக்தி திட்டத்தைக் கொண்டு வரப்பட்டுள்ளது" என்றார்.

பிரதமரின் கதி சக்தி
இந்த "கதி சக்தி" திட்டம் மிக முக்கியமான அறிவிப்பாக இன்றைய பட்ஜெட்டில் பார்க்கப்படுகிறது.. இந்த திட்டத்தின் மூலம் ரூ.100 லட்சம் கோடியில் தொழில்கள் உருவாகும் என்றும், ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். என்றும் நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தின் மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகளவில் இனி போட்டிபோடக்கூடிய சூழல் எழும். இதனால் இந்தியாவின் எதிர்கால பொருளாதார சிறப்பு மண்டலமாக மாறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.. ஆக மொத்தம், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்சி, எஸ்டி. பிரிவினர் போன்றோர் பயனடையும் வகையில், இந்த பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!












Click it and Unblock the Notifications