ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு!
டெல்லி: ஈரான் போர் காரணமாக இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில், போரின் தாக்கங்களில் இருந்து இந்தியக் குடிமக்களைப் பாதுகாக்க முயற்சிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். குறிப்பாக அத்தியாவசிய பொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த உத்தரவிட்டிருக்கிறார்.
தவறான தகவல் அல்லது வதந்திகளையும் தடுக்க, சரியான மற்றும் நம்பகமான பொதுத் தகவல் அமைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில், பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளின் இருப்பு நிலை குறித்து மதிப்பிடப்பட்டது. இந்தப் போரின் பாதிப்பிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மோடி உத்தரவு
மேற்கு ஆசிய மோதல் குறித்த பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் எடுத்த நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கும், அடுத்தகட்ட முயற்சிகளை விவாதிப்பதற்கும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இது இரண்டாவது சிறப்பு CCS கூட்டமாகும். முதல் கூட்டம் கடந்த மாதம் 22 அன்று நடைபெற்றது. மேற்காசிய சூழலால் பாதிக்கப்பட்ட குடிமக்கள் மற்றும் துறைகளின் பிரச்சனைகளைத் தணிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளுக்கும் மோடி உத்தரவிட்டார்.
கூட்டத்தில், காரிஃப் மற்றும் ரபி பருவங்களில் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளை பிரதமர் ஆய்வு செய்தார். தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்க, பொதுமக்களுக்கு உண்மையான தகவல்கள் சீராகக் கிடைப்பதை அவர் வலியுறுத்தினார்.
என்ன பேசினார் மோடி
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டத்திற்குத் தலைமை தாங்கினேன். மேற்கு ஆசியாவின் தற்போதைய மோதலை அடுத்து பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ததுடன், அடுத்தகட்ட முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது" என தெரிவித்திருக்கிறார்.
எல்பிஜி கொள்முதல்
இந்தக் கூட்டத்தில் எரிசக்தி, விவசாயம், உரங்கள், சிவில் விமானப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் (logistics) உள்ளிட்ட முக்கிய துறைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதன், பெட்ரோலியப் பொருட்கள், குறிப்பாக எல்.என்.ஜி./எல்.பி.ஜி. மற்றும் மின்சாரம் வழங்குதலை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். பல்வேறு நாடுகளில் இருந்து எல்.பி.ஜி. கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications