1,300 பேரை பலி கொண்ட துருக்கி, சிரியா நிலநடுக்கம்-பிரதமர் மோடி இரங்கல்- விரையும் இந்திய மீட்பு குழு
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகளுக்காக இந்திய குழுக்கள் விரைகின்றன.
டெல்லி: துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் துருக்கி, சிரியாவில் மீட்பு பணிகளை மேற்கொண்ட 100 பேர் கொண்ட 2 இந்திய குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
துருக்கி, சிரியாவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.6 என்ற அளவுக்கு நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. தற்போதுவரை துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் 1,300 பேர் பலியாகி உள்ளனர். இருநாடுகளிலும் தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று மாலை ஏற்பட்டதில் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. இதனால் துருக்கி, சிரியா பேரழிவை எதிர்கொண்டிருக்கின்றன.

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர், உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்தது வேதனை அளிக்கிறது. கவலையடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த துயரமான தருணத்தில் துருக்கி மக்களுக்கு இந்தியா உறுதிணையாக இருப்பதோடு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம் என்று மோடி கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; நிலநடுக்கத்தால் சிரியாவும் பாதிக்கப்பட்டது என்பது மிகவும் கவலையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். சிரியா நாட்டு மக்களின் துயரத்தில் பங்கேற்று இந்த துயரமான தருணத்தில் அவர்களுக்கு உதவியும், ஆதரவையும் அளிக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே துருக்கி நிலநடுக்கத்தையடுத்து தேவையான அனைத்து உதவிகளையும் அந்நாட்டிற்கு அளிக்குமாறு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்தியதையடுத்து உடனடி நிவாரண வழிமுறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பிகே மிஸ்ரா கூட்டம் நடத்தி விவாதித்தார். தேசிய பேரிடர் மீட்புப்படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள், மருத்துவக் குழுக்களை நிவாரணப் பொருட்களுடன் உடனடியாக அனுப்பி துருக்கி அரசுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 100 பேர் கொண்ட 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தேவையான மருந்துகளுடன் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் தயாராக உள்ளது. அங்காராவில் உள்ள இந்திய தூதரகம், இஸ்தான்புலில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
இக்கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை, பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications