"எமர்ஜென்சி.." காங்கிரஸை விளாசிய மோடி.. நீட் முதல் மணிப்பூர் வரை.. பாயிண்டு போட்டு கார்கே பதிலடி
டெல்லி: இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் நடக்கும் நிலையில், இன்று அனைத்து எம்பிக்களும் பதவியேற்கிறார்கள். இதற்கிடையே முதல் நாளான இன்றே பிரதமர் மோடி, எமர்ஜென்சி காலத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதேநேரம் நீட் முறைகேடு முதல் மணிப்பூர் கலவரம் வரை பல விஷயங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து தரப்பு எம்பிக்களும் பதவியேற்றுக் கொள்கிறார்கள்.

மோடி தாக்கு: இதற்கிடையே லோக்சபா இன்று காலை கூடுவதற்கு முன்பே பிரதமர் மோடி காங்கிரஸ் மீதான விமர்சனத்தைத் தொடங்கிவிட்டார். எமர்ஜென்சி காலத்தைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, அது நாட்டின் இருண்ட காலம் எனச் சாடினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நாளை ஜூன் 25.. சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டது. இந்த நாள் நாட்டின் ஜனநாயகத்தின் கரும்புள்ளி" என்று விமர்சித்துப் பேசினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து "இந்தியா" கூட்டணி மூலம் தேர்தலை எதிர்கொண்டன. இதனால் கடந்த 2 தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜகவால் இந்த முறை தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இதனால் என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே இப்போது மோடி ஆட்சியை அமைத்துள்ளார். இதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் பலத்தை வைத்து அரசுக்கு நெருக்கடி தரத் திட்டமிட்டிருந்தாக தெரிகிறது.
தாக்கு: ஆனால், பிரதமர் மோடி இன்று பேசிய தொனியை வைத்துப் பார்க்கும் போது அதில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.. அவையை எதிர்க்கட்சிகள் முடக்க மோடி அரசு அனுமதிக்காது என்றே தெரிகிறது. இன்று பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை விமர்சித்தார். குறிப்பாக எமர்ஜென்சி காலத்தில் நாடு சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "எனது அரசு மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்று மடங்கு கடினமாக உழைக்கும் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.. ஏனென்றால், சுதந்திரத்திற்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெல்லும் 2ஆவது அரசு இதுதான்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் மூன்றாவது முறையாக ஒரு அரசைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்றால் மக்களுக்கு நோக்கம், கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்புகளில் நம்பிக்கை இருக்கிறது என்றே அர்த்தம்.இதற்காக மக்களுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.
எமர்ஜென்சி: மேலும், அப்போதைய இந்திரா காந்தி அரசு கொண்டு வந்த எமர்ஜென்சியை குறிப்பிட்ட மோடி, "இந்திய ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளி விழுந்து நாளையுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்படி அகற்றப்பட்டது, நமது நாடு ஒரே இரவில் எப்படி சிறைச்சாலையாக மாற்றியது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த கருப்பு நாள் நடந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இனி இது போன்று நடக்காது என உறுதிமொழி எடுக்க வேண்டும்.
இந்தியாவுக்கு ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி தேவை.. மக்களுக்குத் தேவை வெற்று முழக்கங்கள் அல்ல.. விவாதம், விடாமுயற்சி தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.. மக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்" என்றார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிதாகப் பதவியேற்கும் எம்பிக்களுடன் அவர் பதவியேற்பது இதுவே முதல் முறை என்றும் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் பதிலடி: இதற்கிடையே பிரதமர் மோடியின் இந்தப் பேச்சுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நீட் போராட்டங்கள், மேற்கு வங்க ரயில் விபத்து அல்லது மணிப்பூர் வன்முறைகள் குறித்து பிரதமர் பேசுவார் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், "நீங்கள் எதிர்க்கட்சிகளை எச்சரிக்கிறீர்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த எமர்ஜென்சி பற்றிப் பேசுகிறீர்கள்.. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள்.. இந்த லோக்சபா தேர்தலில் மோடிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலாக இந்தியா எதிர்க்கட்சி இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications