எப்ஸ்டீன் ஆவணங்களில்.. பிரதமர் மோடியின் பெயர்! “எதையும் நம்பாதீங்க..” மத்திய அரசு விளக்கம்
டெல்லி: சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளிய கொடூரன்தான் எப்ஸ்டீன். இவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆவணங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக எலான் மஸ்க், டிரம்ப், பில்கேட்ஸ் என பல முக்கிய நபர்களின் பெயர்களும் இந்த ஆவணங்களில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மோடியின் பெயர் வெளியாகியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

என்ன நடந்தது?
அமெரிக்காவை பொறுத்தவரை, குற்றவாளிகளின் பெயர் மற்றும் அவர் தொடர்பான ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அந்த வகையில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்ட எப்ஸ்டீனின் ஆவணங்களும் வெளியாகியிருந்தது. சுமார் 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், 2,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தது.
இந்த ஆவணங்களில் உள்ள ஒரு மின்னஞ்சலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 2017-ஆம் ஆண்டு இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்பு இடம்பெற்றுள்ளது. அந்த மின்னஞ்சலில், எப்ஸ்டீன் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் வியூகவாதி ஸ்டீவ் பேனன் ஆகியோருக்கு இடையிலான தொடர்புகள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வப் பயணம் பற்றியும், அப்போது ஸ்டீவ் பேனன் மூலம் சில சந்திப்புகளை எப்ஸ்டீன் ஒருங்கிணைக்க முயன்றது போன்ற குறிப்புகளும் அதில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செய்தியை இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகக் கடுமையாக மறுத்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் என்பது ஒரு பகிரங்கமான அதிகாரப்பூர்வ நிகழ்வு. அதைத் தாண்டி இந்த ஆவணங்களில் சொல்லப்பட்டுள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒரு குற்றவாளியின் வீணான கற்பனைகள் என்று கூறியுள்ளார். மேலும், இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை முழுக்க முழுக்க ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications