நாளை வெளியாகும் ரூ.100 நாணயம்.. அட எப்படி இருக்கு பாருங்க.. 100வது ‛மன் கீ பாத்’ சிறப்பு இதுதான்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ‛மனதின் குரல்' எனும் ‛மன் கீ பாத்' நிகழ்ச்சியின் 100 வது எபிசோட் நாளை நடைபெற உள்ளது. இதன் நினைவாக நாளை ரூ.100 நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நாணயம் எப்படி இருக்கும்? அதன் சிறப்பு என்ன? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியின் மூலம் ‛மனதின் குரல்' எனும் ‛மன் கீ பாத்' நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி பேசி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மக்களிடம் பேசி வருகிறார். மேலும் ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து வருகிறார். இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த ‛மன் கீ பாத்தின்' 100வது நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த ‛மன் கீ பாத்' நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமான இடங்களில் இதனை ஒலிபரப்பு செய்ய பாஜகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதன்மூலம் ‛மன் கீ பாத்' நிகழ்ச்சி என்பது உலகளவிலும் ஒலிபரப்பப்பட இருக்கிறது. இந்நிலையில் தான் 100வது ‛மன் கீ பாத்' நிகழ்ச்சியின் நினைவாக மத்திய அரசு சார்பில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை பொருளாதார விவகாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
‛‛100வது ‛மன் கீ பாத்' நிகழ்ச்சியின் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிடப்பட உள்ளது. நாணயத்தின் முன்புறத்தில் அசோக சின்னத்தில் இருக்கும் சிங்கங்களின் முகங்கள் இருக்கும். அதன் அடியில் ‛சத்யமேவ ஜெயதே' என இந்தியில் எழுதப்பட்டு இருப்பதோடு நாணயத்தின் மதிப்பிலான 100 இடம்பெற்றிருக்கும். அதோடு நாணயத்தின் முன்பக்கத்தின் வலதுபுறத்தில் ‛பாரத்' எனவும், இடதுபுறத்தில் ஆங்கிலத்தில் ‛இந்தியா' என்றும் எழுதப்பட்டுள்ளது.

நாணயத்தின் மறுபுறம் மைக்ரோபோனுடன் கூடிய ஒலி அலையை குறிக்கும் வகையில் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சியின் நினைவாக இந்த சின்னம் இடம்பெற உள்ளது. அதோடு மேல் மற்றும் கீழ் புறத்தில் மன் கி பாத் என எழுதப்பட்டு இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரூ.100 நாணயம் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகமும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த அமைச்சகம் சார்பில், ‛‛மன் கி பாத் நிகழ்ச்சியின் 100வது எபிசோட் நினைவாக வெளியிடப்படும் ரூ.100 நாணயம் 35 கிராம் எடையுடன் இருக்கும். இந்த நாணயம் என்பது 50 சதவீத வெள்ளி, 40 சதவீத தாமிரம், தலா 5 சதவீதம் நிக்கல், ஜிங்க் கலவையுடன் தயாரிக்கப்பட்டு இருக்கும்'' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications