மெல்ல மூழ்கும் டெல்லி! யமுனை வெள்ளத்தால் சிக்கல்! பிரான்சில் இருந்து அமித்ஷாவுக்கு போன் செய்த மோடி
டெல்லி: டெல்லியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. டெல்லியின் ஒவ்வொரு இடங்களும் தண்ணீரில் மூழ்கி வரும் நிலையில் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அலர்ட் செய்துள்ளார்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் கரையோரத்தில் உள்ள குடியிருப்புகளை மூழ்கடித்த யமுனை ஆற்றின் வெள்ளம் படிப்படியாக டெல்லியின் முக்கிய நகரங்களுக்குள் நுழைந்து வருகிறது.
டெல்லியில் தற்போது கனமழை இல்லாவிட்டாலும் யமுனை ஆற்றின் வெள்ளம் என்பது குறையவில்லை. இதனால் டெல்லி ராஜ்காட் பகுதி, டெல்லி சட்டசபை பகுதி, செங்கோட்டை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்பட பல பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகி உள்ளது.
சாலைகளில் ஆறு போன்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வெள்ளத்தின் காரணமாக வாகனங்களின் போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. பிற மாநிலங்களில் இருந்து காய்கறி உள்பட பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றன.
இதற்கிடையே தான் பிரான்சுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்தபடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி ஆளுநர் விகே சக்சேனா ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டெல்லியில் வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ள அவர் அறிவுறுத்தினார்.
மேலும் டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் படையை முழுவீச்சில் ஈடுபடுத்த வேண்டும். எந்த வகையிலும் மக்கள் பாதிக்காத வகையில் உதவிகள் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதனால் தற்போது டெல்லியில் மழை வெள்ள மீட்பு பணிகள், வெள்ள நிவாரண பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
டெல்லியை பொறுத்தமட்டில் தற்போது மழை இல்லை. இது ஓரளவுக்கு ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட டெல்லியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வடிய 2 நாட்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களும் மக்கள் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications