"சவாலுக்கே சவால் விடுபவன் நான்.." பிரதமர் மோடி சொன்ன அடுத்த நொடி.. மாணவர்கள் ரியாக்ஷன் என்ன தெரியுமா
டெல்லி: தேர்வெழுதும் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தேர்வெழுதும் மாணவர்கள் உடன் கலந்துரையாடுவார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்வு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நரேந்திர மோடி: இந்த நிகழ்ச்சியில் தேர்வெழுதப் போகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுக்க இந்த நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் நாடு முழுக்க இருக்கும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் சீரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஒவ்வொரு சவாலுக்குமே சவால் விடுவது தான் எனது இயல்பு" பிரதமர் மோடி கூறியது மாணவர்களிடையே மிகப் பெரிய கரகோஷத்தைப் பெற்றுத் தந்தது. மற்றவர்களைப் போலப் பிரச்சினையின் போது தன்னால் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது என்று கூறிய அவர், நாட்டில் வறுமையைச் சமாளிக்க ஒரு வழியைத் தேடுவதாகத் தெரிவித்தார்.
பாசிட்டிவாக இருக்க வேண்டும்: எப்போதும் மனதை பாசிட்டிவாக வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "ஒவ்வொரு நபரும் அனைத்து சூழல்களையும் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தால் பிரச்சினைகள் தானாகச் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. மொபைல் போன்களைப் போலவே, மனித உடல்களும் சரியாகச் செயல்பட ரீசார்ஜ் செய்ய வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம்.
போட்டி மற்றும் சவால்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றாலும் கூட அந்த போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள். இதுபோன்ற செயல்களைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்... இது மாணவர்களிடையே தேவையில்லாத பொறாமையை உருவாக்கும்.
வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறாத பெற்றோர்களால் தங்களைப் பற்றி உலகிற்குச் சொல்ல முடிவதில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகள் தங்களுக்கான விசிட்டிங் கார்ட்டாக இருக்க வேண்டும் என்று தவறாக கணக்குப் போடுகிறார்கள்.
டார்கெட் முக்கியம் தான்: மேலும், சில நேரங்களில் டார்கெட்டை அடைய முடியவில்லை என்றால் மாணவர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வது ஒன்றைத் தான்.. முதலில் சிறிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் செயல்திறனை மேம்படுத்தி அந்த இலக்குகளை முதலில் அடையுங்கள்.. இதுவே பெரிய இலக்குகளை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த காலத்தில் மொபைலை அதிகம் பார்ப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது தூக்கம் தொடங்கிப் பல விஷயங்களில் உங்களைப் பாதிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பெற்றோரிடம் பேசிய பிரதமர் மோடி, "கொஞ்ச நேரம் மொபைல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் தள்ளி வைக்க வேண்டும். பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்லிவிட்டு நீங்கள் பயன்படுத்தினால் அதை அவர்களும் கேட்க மாட்டார்கள். எனவே, மொபைல் உள்ளிட்ட எந்தவொரு தொழில்நுட்பத்தின் குறுக்கீடு இல்லாமல் குடும்பத்துடன் கொஞ்ச நேரமாவது செலவிட முயலுங்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
