உயரும் மவுசு.. பிரதமர் மோடியின் ஆட்சி எதிர்பார்த்ததை விட சூப்பரா இருக்காம்.. கருத்து கணிப்பில் தகவல்
டெல்லி: பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடியின் அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதாக 67 சதவிகிதம் பேர் கருத்து கணிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஒரு நாட்டில் பிரதமர்கள் அல்லது அதிபர்கள் ஆட்சியின் போது, அவர்களுக்கான மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு நடத்தப்படும். இதை ஆங்கிலத்தில் approval rating என்று அழைப்பார்கள்.
ஒரு பிரதமர் அல்லது கட்சி எப்படி ஆட்சி நடத்துகிறது, திட்டங்கள் சரியாக இருக்கிறதா, அவரது ஆட்சி முறையை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா என்பது இந்த approval rating மூலம் மட்டுமே உறுதி செய்யப்படும்.

கருத்து கணிப்பு
இந்தியாவிலும் பிரதமர் மோடிக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்று அவ்வப்போது கருத்து கணிப்புகள் நடத்தப்படும். இந்த நிலையில் லோக்கல் சர்க்கிள்ஸ் (LocalCircles) என்ற அமைப்பு பிரதமர் மோடிக்கான மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது. அந்த கருத்து கணிப்பில் பிரதமர் மோடிக்கும் அவருடைய அரசுக்குமான ஆதரவு அதிகரித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு உயர்வு
அதாவது கொரோனா காலத்தில் இருந்து கணக்கிட்டால் இப்போதுதான் இருப்பதிலேயே அரசுக்கு அதிக ஆதரவு இருப்பதாக லோக்கல் சர்க்கிள்ஸ் (LocalCircles) கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 64 ஆயிரம் பேரிடம் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் 67 சதவிகிதம் பேர் பிரதமர் மோடியின் அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதாக, அல்லது எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

2020ல் எவ்வளவு
2020ம் வருடம் கொரோனா தொடங்கும் முன் எடுக்கப்பட்ட போது பிரதமர் மோடி அரசுக்கு 62 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2021ல் கொரோனா உச்சத்தில் இருந்த போது, பல ஆயிரம் பேர் பலியானார்கள். அப்போது பிரதமர் மோடிக்கு 51 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில்தான் தற்போது 67 சதவிகிதம் பேர் பிரதமர் மோடியின் அரசு எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதாக, அல்லது எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் அலை
மத்திய அரசு கொரோனா மூன்றாம் அலைக்கு எதிராக சிறப்பாக தயார் ஆனதாகவும், அந்த சமயத்தில் பொருளாதாரத்தை அரசு சிறப்பாக காத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதே சமயம் மத்திய அரசு வேலைவாய்ப்பு பிரச்சனையை சரி செய்யவில்லை என்று 47 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அரசு இந்த வேலைவாய்ப்பு விவகாரத்தை வரும் வருடங்களில் சரி செய்யும் என்று நம்புவதாக 37 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி
2020ல் இந்த சதவிகிதம் 29 ஆகவும், 2021ல் இந்த சதவிகிதம் 27 ஆகவும் இருந்தது. தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், பணவீக்கம் 8 வருடங்களில் இல்லாத அளவிற்கு உச்சம் தொட்டுள்ள நிலையில்தான் பிரதமர் மோடிக்கான ஆதரவு உயர்ந்துள்ளது. கடந்த மூன்று வருடத்தில் விலைவாசி தொடர்ந்து உயர்கிறது, விலை குறையவில்லை என்று 73% சதவிகித மக்கள் இந்த கருத்து கணிப்பில் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பணவீக்கம்
இந்த ஆட்சியின் கீழ் 73% பேர் தங்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும், சிறப்பாக இருக்கும் என்று கருதுவதாக குறிப்பிட்டுள்ளனர். 44% பேர் காற்று மாசு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். 60 சதவிகித பேர் நாட்டில் ஒற்றுமை நிலவ அரசு சரியான முயற்சிகளை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். 33 சதவிகிதம் பேர் அரசு மக்கள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்த முயலவில்லை என்று கூறியுள்ளனர். 50 சதவிகிதம் பேர் இந்தியாவில் வியாபாரம் செய்வது எளிதாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications