5-வது முறையாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி! நாடாளுமன்றத்தில் நாளை சிறப்பு வரவேற்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 5-வது முறையாக சிங்கப்பூர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். புருனே நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்ற பிரதமர் நரேந்திர இன்றும் நாளையும் அந்நாட்டில் பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்கிறார். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு நாளை சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிபர் தர்மன் சண்முகரத்னத்தையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். புருனே பயணத்தை நிறைவு செய்த பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு இன்று சென்றடைந்தார். பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் சிறப்பான வரவேற்பளித்தனர்.

பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு 5-வது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். 2018-ம் ஆண்டுதான் கடைசியாக சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர் கடந்த 6 ஆண்டுகளில் தற்போதுதான் மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார்.
2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது அவரைச் சிறப்பிக்கும் விதமாக சிங்கப்பூர்ப் பூமலையில் உள்ள ஆர்க்கிட் மலருக்கு டெண்ட்ரோபியம் நரேந்திர மோடி எனப் பெயர் சூட்டப்பட்டது.
சிங்கப்பூர் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை அதிகாரப்பூர்வமான சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும். அதன் பிறகு, அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் வோங் இருவரையும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.

மேலும் பிரதமர் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அளிக்கும் விருந்துகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ஓய்வுபெற்ற மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கையும் பிரதமர் மோடி சந்திப்பார்.
சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யும் வர்த்தக வட்டமேசைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாட உள்ளார். 'இந்தியா ரெடி' திறனாளர் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ளகப் பயிற்சி பெற்ற சிங்கப்பூர் மாணவர்களையும் சிங்கப்பூர் நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி பெறும் ஒடிஷா உலகத் திறன் நிலையத்தின் மாணவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவார்.












Click it and Unblock the Notifications