ஒரே நேரத்தில் ஓமன் மற்றும் மலேசியாவுடன் பேசிய மோடி.. மாஸ்டர் மூவ்! இனி பிரச்சனை இருக்காது!
டெல்லி: வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியா எரிபொருள் நெருக்கடியை சந்தித்திருக்கிறது. இந்நிலையில், ஓமன் மற்றும் மலேசியா நாட்டு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதனால் எரிபொருள் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமன் ஈரானுடனும், அமெரிக்காவுடனும் நட்பாக இருப்பதால், பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. மட்டுமல்லாது ஓமன், ஹார்முஸ் நீரிணைக்கு வெளியேதான் இருக்கிறது. எனவே, எரிபொருள் ஏற்றுமதியில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். அதேபோல மலேசியாவிலும் எண்ணெய் வளம் இருக்கிறது.

ஈரான் விவகாரம்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இரு தலைவர்களுடனும் தனித்தனியே நடத்திய இந்த உரையாடலில், ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் செல்வதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஓமன்: பாதுகாப்பான எரிசக்தி தளம்
ஓமன் நாட்டின் புவியியல் அமைப்பு, அந்த நாடு பெரிய சிரமமின்றி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்ய உதவுகிறது. ஏனெனில், ஓமன் நாடு ஹார்முஸ் நீரிணைக்கு வெளியே (அரபிக்கடல் பகுதியில்) அமைந்துள்ளது. மேலும், ஓமன் எப்போதும் நடுநிலை வகிப்பதாலும், அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியதாலும், ஈரான் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதில்லை.
மலேசியா: எண்ணெய் மற்றும் எரிவாயு வளம்
மலேசியா கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடாக இருந்தாலும், அதன் உற்பத்தி காலப்போக்கில் குறைந்து வருகிறது. 1990-கள் மற்றும் 2000-களின் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு சுமார் 7,00,000 பேரல்களாக இருந்த உற்பத்தி, தற்போது சுமார் 3,50,000 பேரல்களாகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் இருப்பு குறைந்து வருவதும், புதிய கடல்சார் எண்ணெய் கிணறுகள் கண்டறியப்படாததுமே இதற்குப் பிரதான காரணங்களாகும்.
மோடியின் பேச்சு
இருப்பினும், இயற்கை எரிவாயு உற்பத்தியில் மலேசியா தொடர்ந்து ஒரு முக்கிய நாடாகத் திகழ்கிறது. உலகளவில் திரவ இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றுமதி செய்யும் முன்னணி நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இப்படி இருக்கையில் இரண்டு நாடுகளுடனும் மோடி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
மாற்றி யோசிக்கும் இந்தியா
சவுதி,குவைத், கத்தார், பஹ்ரைன், அமீரகம் போன்றவற்றிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதை விட, ஓமனிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டு வருவதை இது காட்டுகிறது. அதேபோல, எண்ணெய் இறக்குமதிக்கு வளைகுடா நாடுகளை தவித்து வேறு ஆப்ஷனை இந்தியா யோசிக்கிறதா என்கிற கேள்வியையும் இந்த உரையாடல் எழுப்பியிருக்கிறது.
இருப்பினும், இந்த உரையாடலின் போது, மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு எல்என்ஜி (LNG) இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications