இந்திய மக்களுடன் காஷ்மீரிகள் இணைந்துள்ளனர்... இனி வளம் பெறுவார்கள்.. மோடி உற்சாகம்
டெல்லி: இந்திய மக்களுடன் காஷ்மீரிகள் இணைந்துள்ளனர், இனி வளம் பெறுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி உற்சாகம் பொங்க தெரிவித்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. பின்னர் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டி அளித்துள்ளார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கூறுகையில் காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதி மக்கள் துணையாக இருக்கின்றனர்.

மத்திய அரசின் நடவடிக்கை
ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் என பாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சில நண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கின்றனர்.

நடவடிக்கை
அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்கள் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் விவகாரத்தில் நாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கையை இந்திய மக்கள் கடினம் என நினைக்கிறார்கள். ஆனால் இது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கவே முடியாது என ஏற்கெனவே ஆண்ட அரசியல் கட்சியினர் கருதியிருந்த நிலையில் நாங்கள் நடத்தி காண்பித்திருக்கிறோம்.

70 ஆண்டுகள்
ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் எப்படி 370 சட்டப்பிரிவு, 35 ஏ பிரிவுகளால் புறக்கணிக்கப்பட்டன என்பது தற்போது அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக தெரியும். கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் உள்ள 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் அப்பகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. வளர்ச்சி என்பதே காஷ்மீரில் இல்லாமல் இருந்தது.

எதிர்காலம்
காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான உரிய பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்படாதது வேதனை அளிக்கிறது. எங்களது அணுகுமுறை வித்தியாசமானது. இத்தனை ஆண்டுகளாக அங்கு அடக்குமுறைதான் மேலோங்கி இருந்தது. ஆனால் நாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக்கிறோம். ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் உள்ள எனது சகோதர, சகோதரிகள் சிறந்த எதிர்காலத்தையே விரும்புகின்றனர்.

மேம்பாடு
அதற்கு மேற்கண்ட இரு சட்டப்பிரிவுகளும் இடம் கொடுக்கவில்லை. பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் புதிய ஆற்றல்கள் பயன்படுத்தப்படவில்லை. தற்போது பிபிஓ முதல் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை, உணவு உற்பத்தி முதல் சுற்றுலா வரை, முதலீடு செய்து இந்த பகுதி இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம். கல்வி மற்றும் திறன் மேம்பாடும் வெளியே வரத் தொடங்கும்.

அத்தகைய வளர்ச்சி
மக்கள் எத்தகைய வளர்ச்சியை விரும்பினார்களோ அத்தகைய வளர்ச்சி கொண்டு வரப்படும் என்பதை ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி சகோதர, சகோதரிகளுக்கு தெரிவித்து கொள்கிறேன். அவர்களது கனவு, லட்சியம் நிறைவேறும். 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் இத்தனை நாட்கள் மக்களை கட்டிப் போட்டிருந்தன. அந்த சங்கிலிகள் தற்போது அறுக்கப்பட்டுவிட்டன. இதனால் மக்கள் அடக்குமுறையை விட்டு விடுவிக்கப்பட்டுவிட்டனர். எனவே அவர்களது எதிர்காலத்தை அவர்களே அமைத்து கொள்ளலாம்.

போராளிகள்
370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் தொடர வேண்டும் என கோரும் எதிர்க்கட்சியினர், அதற்கான நியாயமான வாதத்தை முன் வைக்குமாறு கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. இந்த மாதிரியானோர்தான் பொதுமக்களுக்கு உதவுவதை தடுக்கும் பொருட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு குடிநீர் வழங்கினால் எதிர்ப்பர், ரயில்வே தண்டவாங்கள் கட்சினால் எதிர்ப்பர். பொதுமக்களை கொடுமைப்படுத்தும் மாவோயிஸ்ட்கள், பயங்கரவாதிகளுக்காகவே இத்தகைய போராளிகளின் இதயம் துடிக்கும்.

பஞ்சாயத்து யூனியன்
இன்று இந்திய மக்கள் அனைவரும் ஜம்மு காஷ்மீர் மக்களுடன் இணைந்துள்ளனர். அதே இந்திய மக்கள் காஷ்மீரில் வளர்ச்சியை அதிகரிக்கவும் அமைதியை கொண்டு வரவும் எங்களுடன் துணை நிற்பர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2018-ஆம் ஆண்டு 35000 பஞ்சாயத்து தலைவர்கள் தேர்வாகினர். இந்த தேர்தலில் 74 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். வாக்குப் பதிவின் போது வன்முறை, கலவரம் என்ற பெயரில் யாருடைய ரத்தமும் சொட்டவில்லை. இதெல்லாம் காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியால் நடைபெற்றது. பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் மனித மேம்பாட்டுக்காகவும் பஞ்சாயத்து யூனியன்கள் தற்போது மீண்டும் வந்துள்ளது திருப்தி அளிக்கிறது.

முன்னேற்றம்
கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக பஞ்சாயத்து ராஜ், 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்பது மிகவும் வேதனையை தருகிறது. இதுபோன்ற அநீதியை எப்படி பொருத்துக் கொள்வது? கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் மக்களின் முன்னேற்றத்துக்காக பஞ்சாயத்துகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் இருந்தன.

மின் இணைப்பு
எனவே நான் காஷ்மீர் ஆளுநரிடம் கேட்டுக் கொள்வது என்னவன்றால் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்துவதற்கான பணிகளில் அவர் ஈடுபட வேண்டும். அண்மையில் ஜம்மு காஷ்மீரில் கிராமத்துக்கு திரும்புவோம் என்ற திட்டத்தை நடத்தியுள்ளோம். தூய்மை இந்தியா திட்டம், கிராமப்புறங்களில் மின் இணைப்பு உள்ளிட்டவை அடிமட்டத்தில் உள்ளவர்களையும் சென்றடையும். இதுதான் உண்மையான ஜனநாயகம் என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications