நாமக்கல் டூ நாடாளுமன்றம்.. யார் இந்த எல்.முருகன்? அரசியலில் கடந்து வந்த பாதை!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் கடந்து வந்த பாதை பற்றி பார்க்கலாம்.
அண்மையில் முடிவடைந்த லோக்சபா தேர்தலில் 292 தொகுதிகளில் வெற்றிபெற்று என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவால் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

இவருடன் மத்திய அமைச்சரவையும் பொறுப்பேற்றுள்ளது. அதில் தமிழ்நாட்டில் இருந்து எல்.முருகன் மத்திய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆட்சியின் போது எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் எல்.முருகன் மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், நீலகிரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
அதில் ஆ.ராசாவிடம் தோல்வியடைந்த போதும், மீண்டும் மத்திய அமைச்சரவையில் எல்.முருகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1977ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்தவர் எல்.முருகன். சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த எல்.முருகன், அதன்பின் சென்னை பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் முதுகலைப் பட்டத்தை பெற்றார். அதன்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார்.
அதேபோல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திலும் எல்.முருகன் இணைந்து செயல்பட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் பாஜகவின் தேசிய பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்து வந்தார். தொடர்ந்து 2011 சட்டசபை தேர்தலில் சொந்த மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தனபால் வெற்றிபெற்ற நிலையில், எல்.முருகன் வெறும் 1,730 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
அதன்பின் அரசியல் பணிகளில் தீவிரம் காட்டிய எல்.முருகன், திடீரென தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜனுக்கு பின் தலைவராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட 2வது தலித் தலைவர் எல்.முருகன். இவருக்கு முன்பாக 2000ஆம் ஆண்டு கிருபாநிதி தலைவராக செயல்பட்டுள்ளார்.
அதன்பின் மாநில பாஜக தலைவராக அதிரடியாக அல்லாமல் நிதானமாக கட்சியை மக்களிடையே கொண்டு சென்றார். அதன் கந்தசஷ்டி விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திடீரென தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை மேற்கொண்டு மக்களை திரும்பி பார்க்க வைத்தார். அந்த யாத்திரையில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் பாஜகவை முன்னிலைப்படுத்தியதையும் கவனிக்க வேண்டும்.
அதன்பின் 2021 நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் பாஜகவை போட்டியிட வைத்தார். அதில் பாஜகவுக்கு 4 எம்எல்ஏ-க்கள் கிடைத்ததன் மூலம், நீண்ட நாட்களுக்கு பின் தமிழக சட்டசபையில் பாஜக எல்எல்ஏ-க்கள் கால் பதித்தனர். இதன்பின் பாஜக எம்எல்ஏ-க்களை அழைத்து கொண்டு பிரதமர் சந்தித்த எல்.முருகன், அதன்பின் டெல்லியில் உள்ள தொடர்புகளை வைத்து மத்திய இணையமைச்சரானார்.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக செயல்பட்ட எல்.முருகன், தற்போது மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார். தமிழ்நாட்டை பிரதிபதிப்படுத்தி மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள ஒரே நபர் எல்.முருகன் மட்டும் தான். மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ள இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications